கேரளாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 93 வயது முதியவர் மற்றும் 88 வயதான அவரது மனைவியும் பூரண குணடைந்திருக்கும் செய்தி நிம்மதியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நேற்றைய நிலவரப்படி, இங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 234 பேர். அதேபோல் மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுகாதாரத் துறையின் கண்காணிப்புப் பட்டியலில் இருக்கிறார்கள். இப்படியான சூழலில்தான் இந்த மூத்த தம்பதியர் கரோனாவில் இருந்து மீண்டு வந்து நம்பிக்கையை விதைத்துள்ளனர்.
நோய் தொற்றியது எப்படி?
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தன் குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வந்தார். அங்கிருந்து அவர் தனது தாய், தந்தையுடன் கேரளாவுக்கு வந்தார். இவர்களிடம் இருந்து அடுத்தடுத்து அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கும் கரோனா பரவியது.
அப்படித்தான் வீட்டுக்குள்ளேயே இருந்த இளைஞரின் 93 வயது தாத்தாவுக்கும் 88 வயது பாட்டிக்கும் கரோனா தொற்றுபரவியது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 11 பேரில் 10 பேர் இப்போது முழுமையாகக் குணம் அடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அவர்களில் இந்த முதிய தம்பதி முக்கியமானவர்கள்.
பேரன்போடு கவனிப்பு
கரோனா சிகிச்சையில் இருந்து தாத்தாவும் பாட்டியும் மீண்டு வந்தது குறித்து அவர்களது பேரனும், கரோனாவின் தொடக்கப்புள்ளியாக இருந்தவருமான இளைஞரிடம் பேசினோம். அவர் கூறியது:
இத்தாலியில் இருந்து இங்கு வந்து அதிகமானோருக்கு கரோனாவை பரப்பிவிட்டதாக பலராலும் விமர்சிக்கப்பட்டேன். சமூக வலைதளங்களில் எங்கள் குடும்பத்தை வைத்து மீம்ஸ்களும் வந்தன. கேரள அரசின் கடும் எச்சரிக்கைக்கும் ஆளானோம். ஆனால், கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டது முதல் எங்களை அரசு அத்தனை பேரன்போடு கவனித்துக் கொண்டது.
நாங்கள் அனைவருமே முதலில் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டோம். ஆனால் எனது தாத்தா, பாட்டிக்கு அவசர சிகிச்சை மையமும் தொடர்ச்சியாக வென்டிலேட்டர் கருவியும் தேவைப்பட்டது. பாட்டிக்கு ஏற்கெனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத்தொற்று ஆகியவை இருந்த நிலையில் கரோனாவும் சேர்ந்து கொள்ள சளி, இருமலால் சுவாசிக்கவே ரொம்பவும் சிரமமப்பட்டார்கள். அதனால் அவர்கள் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் வார்டில்சிகிச்சை கொடுத்தனர். தாத்தா, பாட்டிக்கு நல்ல ஆரோக்கியமானஉணவுகளை தந்ததுடன் தன்னம்பிக்கையான விஷயங்களையும் தொடர்ந்து செவிலியர்களும் மருத்துவர்களும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
கூடவே, நாங்களும் நலமாக இருப்பதாக அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்கள்.
நல்ல மருத்துவ சிகிச்சை, நல்ல சத்தான உணவுகளும் தாத்தா, பாட்டியை மீட்டுத் தந்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வந்த நாங்கள் வீட்டுக்குப் போகும் வழியில் என் சகோதரியின் வீட்டுக்குப் போனோம். இதனால் அவருக்கும் அவரது கணவருக்கும் தொற்று பரவியது. நல்லவேளை, அவர்களது 4 வயது மகளுக்கு தொற்று பரவவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் வீட்டுக்குத் திரும்பிய இளைஞருக்கு பத்தனம்திட்டா மருத்துவமனையிலேயே கேக் வெட்டி, பரிசுப் பொருட்களும் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
செவிலியருக்கு தொற்று
முதியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் என்ன மாதிரியான சவால்கள் இருந்தன என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கூறியதாவது:
முதியவர்கள் இருவரையும் முதலில் தனித்தனி அறைகளில் வைத்தே சிகிச்சை கொடுத்தோம்.ஆனால், இருவரும் அதை அசவுகரியமாக உணர்ந்ததால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வசதிகொண்ட ஐசியு-வில் சேர்த்தோம். முதியவருக்கு முதல்நாளே நெஞ்சுவலி ஏற்படும் வாய்ப்பு இருப்பது தெரிந்தது. அதனால் முதலில் அதற்கு சிகிச்சை கொடுத்தோம். தொடர்ந்து தம்பதியர் இருவருக்கும் சிறுநீரகத் தொற்றுக்கும் சிகிச்சை கொடுத்தோம்.
முதலில் பிராணவாயு கிடைக்காமல் சுவாசக் கருவி மூலமே சுவாசித்தவர்கள் ஒருகட்டத்தில் தானாகவே சுவாசிக்க ஆரம்பித்தனர். பிறகு மெதுவாக கரோனா தொற்றில் இருந்தும் விடுபட்டனர். கடந்த 10 நாட்களாகவே வீட்டுக்கு போகவேண்டும் என்பதே தம்பதிகளின அதிகபட்ச ஆசையாக இருந்தது.
அதேநேரம் இவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவர் கரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டார். இப்போது அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மூத்த தம்பதியரை, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வாசலில் வரிசையாக நின்று கைதட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தம்பதியர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
முதியவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் பாதிப்பில் இருந்து மீள்வதுசிரமம் என்ற கருத்து பரவி வரும்நிலையில், மிக வயதான இருவரை அதுவும் பல்வேறு உடல்உபாதைகளுக்கு ஆளானவர்களை வெற்றிகரமாக மீட்டு கொண்டு வந்திருக்கிறது கேரள சுகாதாரத் துறை. இந்த செய்திதான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. கூடவே கரோனாவை வெல்லமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் கேரளா ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago