உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ளது கரோனா வைரஸ். மக்கள்தொகை அதிகம் உள்ள இந்தியாவில் இந்த வைரஸ் பரவினால் நிலைமை என்ன? சிந்தித்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஆனால், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க 21 நாள் முழு அடைப்பை பிரதமர் மோடி துணிச்சலாக அறிவித்தார். அதன்பலனாக, சமுதாய பரவல் என்ற 3-வது நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை.
இதற்கிடையில், கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் எல்லாம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக களமிறங்கிவிட்டன. அதேவேளையில் முதலில் கரோனாவைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனை முறை பரவலாகவில்லை.
இந்தியாவில் அரசு மருத்துவமனையில் இலவசமாகப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் ரூ.4,500 வரை செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பரிசோதனை முடிவுகள் வெளிவர பல மணி நேரமாகும். இந்நிலையில், எளிதில் வைரஸ் பாதிப்பைக் கண்டறிய பரிசோதனை கருவிகள் கண்டுபிடிப்பதில் பலஆய்வு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த, ‘மைலேப் டிஸ்கவரி’ என்ற நிறுவனம், கரோனா வைரஸை குறைந்த செலவில் கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்து வழங்கி உள்ளது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பின்னால் நிறைமாத கர்ப்பிணியின் தீவிர உழைப்பு இருப்பது இப்போது இந்திய மக்களை மனம் நெகிழச் செய்துள்ளது.
அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் மினால் தக்வே போஸ்லே. இவர் ஒரு வைரலாஜிஸ்ட். கடந்த 5 ஆண்டுகளாக வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியவுடன், பரிசோதனை கருவி கண்டுபிடிக்க மைலேப் டிஸ்கவரி நிறுவனம் ஒரு ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் குழுவின் தலைவர்தான் மினால். ஆனால், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஆறு வாரத்தில் சாதனை
பரிசோதனை கருவி கண்டுபிடிக்க 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், மினால் தலைமையில் அவரது கடும் ஆய்வு மற்றும்வழிகாட்டுதலில் ஆய்வுக் குழுவினர்மும்முரமாக இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதன் பலனாக 6 வாரங்களில் புதிய கருவியை இந்தியாவிலேயே முதன் முதலில் கண்டுபிடித்துவிட்டனர்.
அந்தக் கருவியை மைலேப் டிஸ்கவரி உடனடியாக கண்டுபிடித்து விநியோகிக்கத் தொடங்கி விட்டது. கருவிகள் தயாரித்து முடித்து கடந்த மார்ச் 18-ம் தேதி தேசிய வைரலாஜிஸ்ட் நிறுவன அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதன்பிறகுதான் அவருக்கு பிரசவ வலியே வந்துள்ளது. அதுவரை அவரது சிந்தனை எல்லாம் கருவியைக் கண்டுபிடிப்பதிலேயே இருந்துள்ளது. மறுநாள் 19-ம் தேதி அவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து மினால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பரிசோதனை கருவியைக் கண்டுபிடித்த பிறகு, 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த உணர்வு எனக்கு இருந்தது. பரிசோதனை கருவியை கண்டுபிடிக்க வேண்டும், குழந்தை பிறப்பு ஆகிய 2 விஷயங்களும் ஒரே நேரத்தில் நடந்தன. அந்த இரண்டிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை பிறந்தது.
ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதற்கு இதுதான் சரியான நேரம். கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றுகிறேன். இதுபோன்ற அவசரமான கால கட்டத்தில் வேலை செய்யாவிட்டால், என்ன பயன்?
பிரசவத்தில் சிக்கல்
பரிசோதனை கருவியைக் கண்டுபிடிக்கும் குழுவில் 10 பேர் இருந்தோம். என் பிரசவத்தில் சிக்கல்கள் இருந்தன. அதனால், அலுவலகத்துக்கு நேரில் செல்ல முடியவில்லை. எனினும், வீட்டில் இருந்தே எனது குழுவினரை வழிநடத்தினேன். அவர்களுடைய கடுமையான உழைப்பு, ஆதரவால்தான் இந்தக் கருவியைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்தக்கருவியில் கரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். அது எங்கள் குழுவின் மிகப்பெரிய வெற்றி. இந்த நாட்டுக்கு எங்களால் உதவி செய்ய முடிந்தது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு உணர்ச்சிப் பொங்க கூறினார் மினால்.
பரிசோதனை கருவி கண்டுபிடிப்பு குழுவின் மற்றொரு ஆய்வாளர் காந்த் படோல் கூறும்போது, ‘‘ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடிப்பதில் உள்ள நடைமுறைகளைப் போலவே, பரிசோதனை கருவியும் பலவிதமான தர சோதனைகளைத் தாண்டி வரவேண்டும். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு மினால் தக்வேபோஸ்லேவின் பங்கு மிகப் பெரியது. இனிமேல் ஒரு வாரத்துக்கு எங்கள் நிறுவனம் ஒரு லட்சம் பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும்’’ என்றார்.
கரோனா வைரஸ் பாதிப்பை வேறு பரிசோதனைகள் மூலம் கண்டறிய சுமார் 8 மணி நேரமாகும். ஆனால், போஸ்லே குழு கண்டுபிடித்துள்ள கருவி மூலம் 2.5 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்துவிடலாம். இந்தக் கருவி ரூ.1,200 ஆகும்.ஒரு கருவியில் 100 பரிசோதனைகளை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய மினால் மற்றும் அவரது குழுவினரை, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, மற்றும் நடிகர் சோனி ரஸ்தான் உட்பட ஆயிரக்கணக்கான பிரபலங்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
ட்விட்டரில் ஆனந்த் மகிந்திரா வெளியிட்ட பதிவில், ‘‘மிசஸ் போஸ்லே, நீங்கள் பரிசோதனை கருவி மற்றும் குழந்தையை மட்டும் பெற்றெடுக்கவில்லை. இந்த நாட்டுக்கு நம்பிக்கை ஒளியையும பெற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக நாங்கள் எழுந்து நின்று உங்கள் சல்யூட் வைக்கிறோம்’’ என்று மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago