காபூல் சீக்கிய குருத்துவாரா தீவிரவாதத் தாக்குதலில் கேரளா தீவிரவாதி: யார் இவர்? பின்னணி என்ன?

காபூலில் மார்ச் 25ம் தேதி நடத்திய கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் 25 சீக்கிய பக்தர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கேரளா காசர்கோட்டைச் சேர்ந்த தீவிரவாதி மோசின் என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோரசான் மாகாணத்தைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதிகள் 3 பேர் மார்ச் 25ம் தேதி ஆப்கானில் உள்ள குருத்வாரா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்கள் மூவரும் ஆப்கான் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

“கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் இந்தியர் என்பது எங்களுக்குத் தெரிந்தது. மற்ற 2 தீவிரவாதிகளின் அடையாளம் இனிமேல் கண்டுபிடிக்கப்படும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிரச்சாரப்பிரிவைச் சேர்ந்த அபுகாலித் அல் ஹிந்தி என்ற நபர் தீவிரவாதிகளில் ஒருவர் ஆவார். இவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இவரை அபுல் கயூம், அப்துல் காலித் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுவதுண்டு.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதியின் பெயர் மோசின் என்றும் இவர் திரிகரிபூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இவருக்கு வயது 29, பள்ளிப்படிப்பை பாதியில் உதறியவர் என்று கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் கன்னூருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

மோசின் 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ளார். இவரது குடும்பத்தினரும் போலீஸுக்கு எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை. புகாரையும் அளிக்கவில்லை. மேலும் மோசினுக்கும் குடும்பத்துக்கும் 2 ஆண்டுகளாக எந்த ஒரு தொடர்பும் இல்லை. இந்த சங்கிலித் தொடர் நிகழ்வுகளை ஆராய்வதாக அதிகாரி தெரிவித்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக யு.ஏ.இ. செல்கிறேன் என்ற பெயரில் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அங்கிருந்து அவர் எப்படி ஆப்கானிஸ்தான் ஐஎஸ் படையுடன் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. விசாரித்து வருகிறோம் என்கிறார் மூத்த அரசு அதிகாரி. இன்னமும் கூட தீவிரவாதி மோசின் மீது போலீஸ் புகார் இல்லை.

2016-ல் கேரளாவிலிருந்து 2 பிரிவாகக் கிளம்பி ஐஎஸ்.-ல் இணைந்த 21 பேர்களில் மோசின் பெயர் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE