ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இன்று பொறுப்பேற்கிறார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் சட்டப்பேரவையை கூட்டும் முன்பாகவே முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ம.பி.யில் புதிய அரசு அமைக்க பாஜக நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்த சூழலில் பதவி விலகிய 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜே.பி. நட்டாவை சந்தித்து அவரது முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அம்மாநிலத்தில் எந்த நேரத்திலும் பாஜக அரசு அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் இன்று மாலை ம.பி. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பொறுப்பேற்கிறார். முன்னதாக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.