ஐ.எஸ்.ஸுக்காக கேரள இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் இந்தியன் முஜாகுதீன்: மத்திய அரசு எச்சரிக்கை

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் கேரள இளைஞர்களை தங்களது இயக்கத்துக்கு ஈர்க்க குறிவைத்துள்ளதாக மாநில அரசுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்து இருக்கலாம் என்றும், அவர்கள் மூலம் சிரியா மற்றும் இராக்கில் செயல்படும் தங்களது இயக்கத்துக்கு இளைஞர்களை ஈர்த்து ஆள்சேர்ப்பில் ஈடுபட திட்டமிட்டு இருக்கலாம் என்றும் கேரளாவை மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான முகமது சாஜ்ஜித் சிரியாவில் நடந்து வரும் போரில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகள் வெளியாகியதை அடுத்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் யாசின் பட்கல், டி.ஏ.ஷிபிலி, தந்தியன்விதே நசீச் ஹஜி, உமர் ஹரூக், இப்ராஹிம் மவுலாவி மற்றும் சாப்தார் நாகோரி ஆகியோரின் கைதை தொடர்ந்த அந்த இயக்கம் இந்தியாவில் தனது தொடர்புகளை இழந்துள்ளது. இதனால் கேரளாவில் இந்தியன் முஜாகுதீன் மற்றும் ஜாம்-இ-யதூக் அன்சுருல் முஸ்லிமீன் இயக்கத்துடன் ஐ.எஸ். தனது தொடர்பை விரிவுபடுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளிகள் அயூப், சோயப் ஆகியோர் தங்களது பெயர்களை மாற்றி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து இருக்கலாம் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

கேரளாவிலிருந்து தலைமறைவான இவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த இயக்கத்துடன் இணைந்திருக்கலாம் என்றும் கேரள இளைஞர்களை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் கேரள இளைஞர்களை சேர்க்கும் பணியில் இவர்கள் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கலாம் என்றும் உளவுத்துறை தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், பாலக்காட்டை சேர்ந்த அபுதாகீர் என்ற இளைஞர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக கத்தார் சென்று அதன் பின்னர் தொடர்பு இல்லாமல் போனது தொடர்பாகவும் உளவுத்துறை விசாரித்துள்ளது. அதன் மூலம் அபுதாகீர் அரபு அமீரகம் வந்தடைந்ததாக இந்திய தூதரகத்துக்கு தகவல் வரவில்லை என்றும், ஆனால் அவருடைய ஃபேஸ்புக் பக்கம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, குன்னுமாலை சேர்ந்த மற்றொரு கேரள இளைஞரும் கடந்த 4 மாதங்களாக சந்தேகத்துக்குரிய வகையில் காணாமல் போனதும் உளவுத்துறைக்கு சந்தேகிக்கச் செய்துள்ளது.

அதேசமயம், காணாமல் போன நபர்களுக்கு கேரளாவுக்குள் இயங்கும் எந்த மத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE