ரேஷனில் 6 மாதத்துக்கான பொருட்களை வழங்க திட்டம்: மத்திய உணவுத் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ரேஷனில் 6 மாதத்துக்கான பொருட்களை ஒரு முறையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக சீனா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த இத்தாலியும் சீல் வைக்கப்பட்டிருப்பதால் சுமார் 6 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதேபோல பிரான்ஸ்முழுவதும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நகரங்கள் சீல்வைக்கப்படுவதால் மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவும் இதுபோன்ற கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் கை கழுவும் திரவம் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி குவிக்கின்றனர். இதனால் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் குறித்து மத்தியஉணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பிடிஐசெய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசின் கிடங்குகளில் போதுமான தானியங்கள் கையிருப்பில் உள்ளன. ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கான பொருட்களை ஒருமுறையில் வழங்க மாநில அரசுகள், யூனியன்பிரதேச அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். பஞ்சாப் மாநில அரசு இந்த திட்டத்தை ஏற்கெனவே செயல்படுத்த தொடங்கிவிட்டது. மத்திய அரசிடம் கூடுதலாக 272.19 டன் அரிசி, 162.79 டன் கோதுமை கையிருப்பில் உள்ளது.

தற்போதைய விதிகளின்படி ரேஷனில் 2 மாதங்களுக்கான பொருட்களை முன்கூட்டியே வழங்க முடியும். இதனை 6 மாதங்களாக அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம். இந்த திட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும். இதன்மூலம் 75 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவைரஸ் அச்சுறுத்தல் காரணமாகநகர்ப்புறங்களில் உள்ள மக்கள்உணவு தானியங்களை வாங்குவதற்காக அலைமோதுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பீதி அடையவேண்டாம். மத்திய அரசிடம் போதுமான உணவு தானியங்கள் இருப்பு உள்ளது.

பயப்பட வேண்டாம்

நெருக்கடி கால உணவு தானிய இருப்பாக 10 மடங்கு உணவு தானியங்கள் இந்த ஆண்டுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் பட்சத்தில் நாட்டிலுள்ள 5 லட்சம் நியாய விலைக்கடைகள் மூலம் அவை மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். எனவேஉணவு தானியம் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயப்படத் தேவையில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தை பொறுத்தவரை அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் இவை இரண்டும் சேர்த்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ், குடும்ப உறுப்பினர்கள் அடிப்படையில் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் நிர்ணயிக்கப்பட்ட அளவு வழங்கப்படுகிறது. இவை தவிர, சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு தொடர்பாக, தமிழக உணவுத்துறையில் கேட்டபோது, ‘எங்களுக்கு இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. வந்தால் அது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என்றனர்.

தமிழக அரசு விளக்கம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE