கரோனா தொற்று: மத்திய அமைச்சர் ஒருவரின் யோசனை

இந்தியாவில் கரோனா தொற்று 167 என்று மதிப்பிடப்பட்டுள்ளது, உலகம் முழுதும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 8000த்தைக் கடந்துள்ளது சுமார் 2 லட்சம் பேர் வரை கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்திய சுகாதார இணை அமைச்சர் அஸ்வினி சவ்பே கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள வழக்கத்துக்கு மாறான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே கேன்சர் சிகிச்சைக்கு பசு சிறுநீரைப் பயன்படுத்த அறிவுரை வழங்கிய அதே அஸ்வினி சவ்பே இம்முறை ‘சூரிய ஒளியில் 15 நிமிடங்கள் வரை தினசரி அமர்ந்தால் உடலின் எதிர்ப்புச் சக்தியும் கூடும் கரோனாவிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அஸ்வினி சவ்பே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கூறும்போது, “காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை சூரியன் தகிக்கும். 15 நிமிடங்கள் இந்த வெயிலில் அமர்ந்தோமானால் நம் உடலின் வைட்டமின் டி சத்து அதிகரிக்கும், இது உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு கரோனா உள்ளிட்ட வைரஸ்களையும் கொன்று விடும். ” என்றார்.

நேற்றுதான் பிரதமர் மோடி எம்.பி.க்களையும் அமைச்சர்களையும் ‘அறிவியல் ஆதாரமில்லாத எதையும் கூறாதீர்கள்’ என்று எச்சரித்திருந்தார், இந்நிலையில் சவ்பே இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்களன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தடுப்பு, பாதுகாப்பு உத்திகள் குறித்த 3 பக்க அறிக்கையில் வைட்டமின் டி மற்றும் சூரிய ஒளி குறித்து எதுவும் கூறப்படவில்லை.

சூரிய ஒளியில் வைட்டமின் டி நிறைய இருக்கிறது என்பது அறிவியல் உண்மை என்றாலும் அது கோவிட்-19-ஐத் தடுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE