இந்தியாவில் 3-வது பலி: கரோனா வைரஸ் பாதித்தவர் மும்பையில் மரணம்

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முறையாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 39 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அம்மாநிலத்தில் முதன்முறையாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த அவர் அண்மையில் துபாய் சென்று வந்துள்ளார். 64 வயதான அவர் முதலில் இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். இந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உறவினர்கள் இருவருக்கு ரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் ஏற்கெனவே 2 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் ஒருவரும், டெல்லியில் ஒருவரும் உயிரிழந்தனர். தற்போது 3-வது மரணம் நிகழ்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE