இந்தியா

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆளுநருக்கு பாஜக கோரிக்கை

செய்திப்பிரிவு

மத்திய பிரதேசத்தில் மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் லால்ஜி டான்டனிடம் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், அவர் கடந்த 10-ம் தேதி அக்கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்களாக கருதப்படும் 6 மத்திய பிரதேச அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் என்.பி.பிரஜாபதிக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த கடிதங்களை பாஜகவினர் பேரவைத் தலைவரிடம் நேரில் ஒப்படைத்தனர். பதவி விலகியவர்களில் 19 பேர் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் பெங்களூருவில் தங்கி உள்ளனர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதல்வர் கமல்நாத் மாநில ஆளுநர் லால்ஜி டான்னை இன்று நேரில் சந்தித்தார். அப்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக இருப்பதாக கூறினார். அதேசமயம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பாஜகவினர் கடத்திச் சென்று அடைத்து வைத்திருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

இந்தநிலையில் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜகவினர் இன்று ஆளுநர் லால்ஜி டான்டனை சந்தித்து பேசினர்.

அப்போது மத்திய பிரதேசத்தில் மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT