சிஏஏ எதிர்ப்புப் போராட்டம்; குற்றம் சாட்டப்பட்டவர்களை சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தலாம் என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது?- உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

By பிடிஐ

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதம் செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்களை போஸ்டர்கள் மூலம் தெரியப்படுத்தலாம் என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், சுவரொட்டிகளை நீக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டம் சில இடங்களில் கலவரமாக மாறி கல்வீச்சு, தீ வைப்பு, பேருந்துகள் சேதம் எனப் பல சம்பவங்கள் நடந்தன.

இந்தக் கலவரத்தில் 22 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட உ.பி. போலீஸார் 57 பேரின் புகைப்படங்கள், முகவரி ஆகியவற்றை வெளியிட்டு அவர்கள் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றைக் குறிப்பிட்டு பேனர் வைத்து அவமானப்படுத்தியது.

இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காக எடுத்து அலகாபாத் நீதிமன்றம் விசாரித்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துர், நீதிபதி ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் சிறையில் இதே காரணங்களுக்காக அடைக்கப்பட்டிருக்கும்போது குறிப்பாக இவர்களின் புகைப்படம், முகவரியை வெளியிட்டுப் பொது இடங்களில் வைக்க வேண்டிய அவசியம் என்ன, இது அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும்.

இதுபோன்று பேனர்கள் வைக்கலாம் என்று எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இந்த பேனர் வைக்கப்பட்டதற்கான விளக்கத்தை சொலிசிட்டர் ஜெனரல் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதிக்கக் கோரி உத்தரப் பிரதேச அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு விடுமுறைக் கால அமர்வில் நீதிபதிகள் யு.யு.லலித், அனிருத்தா போஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

உத்தரப் பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். மேலும், அந்த போஸ்டரில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரி பெயர் இடம் பெற்றிருந்ததால், அவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் யு.யு.லலித், அனிருத்தா போஸ், " சிஏஏ போராட்டத்தில் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், போராட்டக்காரர்கள் குறித்த விவரத்தை சுவரொட்டி அடித்து பிரகடனப்படுத்தலாம் என்று சட்டத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அவ்வாறு சட்டத்தில் எங்கு இருக்கிறது. உ.பி. அரசின் செயலுக்குச் சட்டத்தில் எந்தக் காரணமும் கற்பிக்க முடியாது" என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் தெரிவித்தனர்.

அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட 57 பேரும் பொதுச்சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதற்குப் பொறுப்பானவர்கள். புட்டாசாமி மற்றும் ராஜகோபலன் வழக்கில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அந்த உரிமை என்பது கிடையாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட இவர்கள் அந்த உரிமை பாதிக்கப்பட்டதாகக் கூற முடியாது" என வாதிட்டார்.

உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் : கோப்புப்படம்

அதற்கு நீதிபதி லலித், "இதுபோன்ற போஸ்டர்களை வைக்க மாநில அரசுக்கு யார் அதிகாரம் அளித்தது. நீங்கள் செய்த செயலுக்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது. இந்த விவகாரத்தை அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆதலால், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அனுப்புகிறோம். தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அடுத்த வாரம் இதை விசாரிக்கும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்