சமூக நல்லிணக்கக் குலைவு, பொருளாதார விரக்தி நிலை, கரோனா வைரஸ் - முப்பெரும் நெருக்கடிகள்- ‘கனத்த இதயத்துடன்’ மன்மோகன் கட்டுரை

By செய்திப்பிரிவு

சுதந்திர ஜனநாயக நாடு என்பதை உலகிற்கு தன்னைக் காட்டி வந்த நிலையிலிருந்து இன்று பொருளாதார விரக்தியிலிருக்கும் பெரும்பான்மையினருக்கான நாடாக இந்தியா சரிவடைந்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்கு எழுதிய பத்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனை ‘கனத்த இதயத்துடன் நான் எழுதுகிறேன்’ என்று தொடங்கி பத்தி எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

சமுதாயச் சீர்குலைவு, பொருளாதார மந்த நிலை, உலக ஆரோக்கியத்துக்கு எதிரான கரோனா வைரஸ் ஆகிய முப்பெரும் நிலைகளினால் இந்தியா பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகிறது. சமூக அமைதியின்மை, பொருளாதார மந்த நிலை சுயமாக ஏற்படுத்திக் கொண்டது என்றால் கரோனா தாக்குதல் புற அதிர்ச்சியாகும். இந்த சக்திகளின் கூட்டு இந்தியாவின் ஆன்மாவையே பிளவுபடுத்துவதோடு, உலகின் பொருளாதார மற்றும் ஜனநாயக என்ற உலகத் மதிப்பியல்களிலிருந்தும் நாட்டை சரிவுக்குள்ளாக்கியுள்ளது.

டெல்லி மிகத்தீவர வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு எந்த ஒரு காரணமும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட சக இந்தியர்களை இழந்திருக்கிறோம். பல நூறுபேர் காயமடைந்துள்ளனர். வகுப்புவாத பதற்றங்கள் உருவாக்கப்பட்டு நம் அரசியல் வர்க்கம் உட்பட சமூக விரோத சக்திகள் விசிறி விட்டு கொழுந்து விட்டு எரியச் செய்த மதச்சகிப்பின்மை நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகங்கள், பொது இடங்கள், வீடுகள் ஆகியவை வகுப்புவாத வன்முறை வெளிப்பாடுகளின் அழிபாரத்தைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இந்திய வரலாற்றின் இருண்ட நாட்களை இது நினைவூட்டுவதாக அமைந்தது. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய நிறுவனங்கள் குடிமக்களை காக்க வேண்டிய தர்மத்தினைக் கடைபிடிக்கவில்லை. நீதித்துறை, நம் ஜனநாயகத்தின் 4வது தூண் ஆன ஊடகங்கள் நம்மை தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளன.

தேசத்தின் ஆன்மா தீக்கிரையானது...

எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் சமூகப்பதற்றம் எனும் நெருப்பு நாடு முழுதும் வேகமாகப் பரவி நம் தேசத்தின் ஆன்மாவை தீக்கிரையாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீயை மூட்டியவர்கள்தான் அதை அணைக்க முடியும். நாட்டின் தற்போதைய வன்முறைக்கு இந்திய வரலாற்றின் கடந்தகால சம்பவங்களை, சந்தர்ப்பங்களைச் சுட்டி நியாயப்படுத்துவது வியர்த்தமும் அறிவுக்கு விரோதமானதும் ஆகும். எந்த ஒரு வகுப்புவாத வன்முறையும் மகாத்மா காந்தியின் இந்தியாவுக்கு ஏற்படுத்தும் களங்கமே. சுதந்திர ஜனநாயக நாடு என்பதை உலகிற்கு இந்தியா தன்னைக் காட்டி வந்த நிலையிலிருந்து இன்று பொருளாதார விரக்தியிலிருக்கும் பெரும்பான்மையினருக்கான நாடாக இந்தியா சரிவடைந்துள்ளது.

நம் நாட்டின் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது சமூக அமைதியின்மை வன்முறை போன்றவை இன்னும் மேலதிகமாகவே பொருளாதார மந்தநிலைமீது தன் தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் துறையிடமிருந்து முதலீடு இல்லாமல் போவது என்பதே தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் இன்னல் என்பது தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது. முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் புதியத் திட்டங்களை முன்னெடுக்க விருப்பம் கொள்வதில்லை. ரிஸ்க் எடுக்கும் அவர்களது ஆர்வம் குறைந்து விட்டது. சமூக அமைதியின்மையும், வகுப்புவாத பதற்றங்களும் அவர்களது அச்சங்களை அதிக்கப்படுத்தவே செய்கின்றன. பொருளாதாரத்தின் பெரும் அடித்தளமான சமூக நல்லிணக்கம் இப்போது அச்சுறுத்தலாகியுள்ளது. நம் கண்பார்வையில் வன்முறை பெரிதாக ஏற்படும் போது எந்த ஒரு வரிக்குறைப்பும், கார்ப்பரேட் ஊக்கமளிப்பும், எந்த ஒரு இந்தியரையும் அயல்நாட்டினரையும் முதலீடு செய்ய ஊக்கமளிக்காது. முதலீட்டின்மை என்பது வேலையின்மை, வருவாயின்மை இதோடு இதன் விளைவான நுகர்வின்மை, பொருளாதாரத்தில் தேவையின்மை ஆகியவை கோலோச்சும். தேவை குறைந்தால் தனியார் முதலீடுகளை இது மேலும் ஒடுக்கவே செய்யும். இத்தகைய அனவஸ்தை சுழற்சியில்தான் நம் பொருளாதாரம் தேங்கியுள்ளது.

இத்தகைய சுயமாகச் செலுத்திக் கொண்ட வேதனைகளுடன் கோவிட்-19 என்ற புதிய அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. இது எந்த அளவுக்குப் பரவும் தாக்கம் செலுத்தும் என்பதும் இன்று வரை கண்டறியப்படாததாகவே உள்ளது. ஆனால் நாம் கரோனாவை எதிர்கொள்ள முழு தயாரிப்புடன் இருந்தாக வேண்டியுள்ளது. ஒரு தேசம் எதிர்கொள்ளும் மிகபெரிய அபாயமே இத்தகைய கொள்ளை நோய்கள்தான். எனவே எந்த ஒரு சுணக்கமும் அலட்சியமும் இல்லாமல் இதனை முழுவீச்சில் எதிர்கொண்டாட வேண்டியுள்ளது...

இந்த வைரஸ் பெரிய அளவில் நம் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துமோ ஏற்படுத்தாதோ ஆனால் இதன் தாக்கம் உலக அளவில் ஏற்கெனவே உணரப்பட்டு விட்டது. உலக வங்கி ஏற்கெனவே பெரிய பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டியுள்ளது. சீனப் பொருளாதாரமே சுருங்கினாலும் சுருங்கி விடும், உலகப்பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு சீனா பங்களிப்பு செய்கிறது, இந்திய ஏற்றுமதிகளில் 10-ல் ஒரு பங்கை சீனாதான் தீர்மானிக்கிறது. இந்நிலையில் உலகப்பொருளாதார நிலை ஆபத்தில் உள்ளது. இது இந்தியாவின் பொருளாதார நிலையையும் பாதிக்கும். முறைசார்ந்த வேலைவாய்ப்புகளை முக்கால் பங்கு தீர்மானிக்கும் லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் உலக சப்ளை சங்கியிலின் கண்ணியாகும். இத்தகைய ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர் உலக பொருளாதார நிலையில் கோவிட்-19 நெருக்கடி இந்திய ஜிடிபியில் மேலும் 1 அல்லது அரை சதவீதம் குறைக்கவே செய்யும்.

சீர்த்திருத்தங்கள்..

அரசு ஒரு மும்முனைத் திட்டத்தை கண்டடைய வேண்டும் என்பதே என் நம்பிக்கை. முதலில் கோவிட்-19 என்ற இந்த அச்சுறுத்தலை அகற்ற முழு வீச்சுடன் செயல்பட வேண்டும். இரண்டாவது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்று வாபஸ் பெற வேண்டும் இல்லையெனில் திருத்த வேண்டும். இதைச் செய்தால்தான் தேச ஒற்றுமையை வளர்க்க முடியும். மூன்றாவதாக விரிவாகவும் இந்த விரிவில் உன்னிப்பாக கவனம் செலுத்தும் விதமான நுகர்வை அதிகரிக்கும் தேவையை அதிகரிக்கும் நிதி ஊக்கமளிப்புத் திட்டத்தைத் தீட்டி பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாது செயல்களாலும் இந்த நாடு எதிர்கொண்டுள்ள அபாயங்களை அறிந்திருக்கிறார் என்றும் இதிலிருந்து வெளியே வர அவர் உதவ முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தி திருப்தியுறச் செய்ய வேண்டும்...

அச்சத்தை மிகைப்படுத்தி, ஊதிப்பெருக்குவது என் விருப்பமல்ல, ஆனால் இந்திய மக்களிடம் உண்மையைப் பேச வேண்டுமென்பது நமது கடமையாகும். அந்த உண்மை என்னவெனில் நடப்பு நிலவரம் இறுக்கமாகவும் நம்பிக்கையற்ற நிலையிலும் உள்ளது என்பதே. நாம் கொண்டாடும் நமக்கு தெரிந்த இந்தியா நம் கண்ணெதிரே கை நழுவிப் போய்க்கொண்டிருக்கிறது. வகுப்புவாத பதற்றங்கள், முழுதான பொருளாதார சீர்கேட்டு நிர்வாகம் மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தலான கோவிட்-19 ஆகியவை இந்திய வளர்ச்சியையையும் நிலையையும் தடம்புரளச் செய்கிறது. ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் இத்தகைய கடினமான எதார்த்தத்தையும் இருண்ட இடர்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது, இது பற்றி போதிய அளவில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

-கட்டுரை ஆசிரியர்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூலம்: தி இந்து ஆங்கிலம் நாளிதழ்

தமிழில் சுருக்கமாக.. இரா.முத்துக்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்