என்பிஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இந்த ஆண்டு எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்றால் என்ன, வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் இதற்கும் என்ன வேறுபாடு, என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என பல்வேறு கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.
தேசிய மக்கள்தொகை பதிவேடு என்றால் என்ன என பார்க்கலாம்.
வழக்கமாக குடியிருப்பவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக தேசிய மக்கள்தொகை பதிவேடு செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறுகிறது. என்பிஆர் என்பது முதன்முறையாக 2010-ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சி்ங் அரசால் கொண்டு வரப்பட்டது. 2015-ம் ஆண்டு என்பிஆர் உடன் ஆதார் இணைக்கப்பட்டது. ஆனால், அசாம் மாநிலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து என்பிஆர் பற்றிய பல சர்ச்சைகள் உருவாகின.
இதனால் வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இரண்டடையும் குழப்பிக் கொள்ளும் சூழல் உருவானது.
* என்பிஆர் என்றால் என்ன?
என்பிஆர் என்பது நாடு முழுவதும் வழக்கமான குடிமக்களிடம் இருந்து தகவல்களைத் திரட்டுவதுதான். மக்களிடம் இருந்து கிராமங்கள், நகரங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள், தேசிய அளவில் தகவல்கள் திரட்டப்படும். இதற்கான தகவல்கள் 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் மற்றும் 2003-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிமுறையின் கீழ் பெறப்படும்.
* வழக்கமான மக்கள் என்றால் என்ன?
வழக்கமாக வசிக்கும் மக்கள் என்பது ஒரு பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிப்பவர்கள் கணக்கிடப்பட்டு அவர்கள் வழக்கமாக வசிக்கும் மக்களாகக் கருதப்படுவர்.
* என்பிஆரை யார் நடத்துவார்கள்?
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரிவு பதிவாளர்தான் என்பிஆரை நடத்துவர்.
*என்பிஆரின் கீழ் என்னென்ன தகவல்கள் பெறப்படும்?
என்பிஆர் என்பதே நாடு முழுவதும் மக்களிடம் இருந்து பல்வேறு விதத் தகவல்களைத் திரட்டுவதுதான். இதில் மக்கள் குறித்த விவரங்களைச் சேமிப்பதுதான் இதன் நோக்கம். இதில் கீழ்க்கண்ட அடிப்படைத் தகவல்கள் திரட்டப்படும். என்பிர்ஆர் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மத்திய அரசின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
பெயர்
குடும்பத் தலைவருடனான உறவு
தந்தை பெயர்
தாய் பெயர்
கணவன்/ மனைவி பெயர் ( திருமணம் ஆகி இருந்தால்)
பாலினம்
பிறந்த தேதி
திருமணமான விவரம்
பிறந்த ஊர்
நாடு
தற்போதைய முகவரி
அங்கு தங்கியிருக்கும் காலம்
நிரந்தர முகவரி
வேலை
கல்வித் தகுதி
ஆகிய பிரிவுகளைப் பூர்த்தி செய்யம் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் தாய் மற்றும் தந்தையர் பற்றிய விவரம் இடம் பெறும்போது, அவர்கள் உடன் வசிக்கிறார்களா அல்லது வேறு இடத்தில் வசிக்கிறார்களா என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். எந்த மாநிலம், எந்த நகரம் என்பதையும் அவர்களது பிறந்த தேதியையும் தெரிவிக்க வேண்டும்.
மேலும், வேலை, கல்வித் தகுதி போன்றவற்றை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகையான கல்வி என்பதைக் குறிப்பிட வசதியாக பள்ளிப் படிப்பு தொடங்கி பல்வேறு விதமான படிப்புகள் வரை தெரிவிக்க வேண்டும். அதுபோலவே வேலைவாய்ப்பும் விவசாயம், தொழில், பணி, சேவைப் பணி, அரசுப் பணி என பல பிரிவுகள் குறிப்பிடப்பட்டு அதில் தேர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது.
* என்பிஆர் கணக்கெடுப்பின்போது சான்றிதழ் தர வேண்டுமா?
என்பிஆர் கணக்கெடுப்பின்போது எந்தச் சான்றும் தர வேண்டிய அவசியம் இல்லை. தனது சுய விவரக்குறிப்புத் தகவல்களை ஒருவர் தந்தால் போதுமானது. அதற்கான சான்றுகள் அல்லது கை ரேகை கேட்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
* என்பிஆர் எப்போது நடைபெறும்?
என்பிஆர் என்பது 2020 ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் நடைபெறும். அசாம் மாநிலத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டபோது பெறப்பட்ட தகவல்களை என்பிஆருக்கு எடுத்துக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது.
* மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
என்பிஆர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டும் ஒரே நேரத்தில் தொடங்கும். எனினும் இதில் பெறப்படும் தகவல்கள் என்பது ஒரே மாதிரியானவை அல்ல. என்பிஆர் என்பது பல்வேறு விதமான மக்கள் யார் யார் என்பதை உறுதி செய்வது மட்டும்தான்.
ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் கல்வித் தகுதி, வீடு, சொத்து, அவர்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரச் சூழல் போன்ற விவரங்களைச் சேகரிப்பதாகும்.
இந்தத் தகவல்களின் மூலம் மக்களின் நிலைமையை அறிந்து எதிர்காலத்தில் நலத்திட்டங்களை வழங்குவதும், தேவையில்லாதோருக்கு நலத்திட்டங்களைக் குறைப்பதற்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுகிறது.
இதுமட்டுமின்றி மக்கள் வாழ்க்கை சூழல், பொருளாதார நிலை, வேலை, கல்வித் தகுதி, கல்வியறிவு, வீடு, வீடுகளில் உள்ள வசதிகள், நகர்புறம், பிறப்பு, இறப்பு உள்ளிட்டவை குறித்த துல்லியமான தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் பெற முடியும். இதுமட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியின மக்கள், மொழி, மதம், இடம்பெயர்தல், உடல் குறைபாடு உள்ளிட்ட பல விவரங்களையும் பெற முடியும்.
இத்துடன் விவசாயிகள், தொழிலாளர்கள், பல துறை நிபுணத்தவம் உள்ளவர்கள் என பலரைக் குறித்த தகவல்களையும் சேகரிக்க முடியும். மேலும் கிராமங்கள், நகரங்களின் வளர்ச்சியையும் கணக்கிட முடியும். மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தண்ணீர், பாசனம், விவசாயம், வீடுகள், தொழில்கள், வர்த்தகம், பாலினம் வாரியாக விவரங்களைப் பெற முடியும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது. முதல் பிரிவு 2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறுகிறது. வீடுகள் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. அடுத்தது 2021-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும். இதில் மக்கள் குறித்த விவரங்கள் கோரப்படும்.
* என்பிஆருக்கும் என்ஆர்சிக்கும் என்ன வேறுபாடு?
தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது இந்தியாவில் உள்ள மக்களிடம் இருந்து தகவல்களைத் திரட்டுவதுதான். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது இந்திய குடிமக்கள் யார் என்பதை உறுதி செய்வது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஒவ்வொருவரிடமும் சான்றுகள் கேட்கப்படும். அவ்வாறு சான்றுகள் இல்லையென்றால் அவர்கள் வெளிநாட்டினராக கருதப்பட்டு ஓரிடத்தில் தடுத்து வைக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் இது எதுவும் இல்லை. இதனால்தான் இரண்டுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசு கூறி வருகிறது.
* மக்கள்தொகை கணக்கெடுப்பு இருக்கும்போது பிறகு ஏன் தேசிய மக்கள்தொகை பதிவேடு?
மக்கள் குறித்த வெறும் விவரங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமின்றி அவர்கள் யார் என்ற விவரங்களையும் தெரிந்துகொள்ளவே என்பிஆர் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago