வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்த தங்களது உறவினர்களின் உடல்களைப் பெறுவதற்காக ஜிடிபி மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு வெளியே ஏராளமான மக்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை நடத்திய பிறகே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
புதன்கிழமை இரவு வரை, தில்ஷாத் கார்டனில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. இன்று மூன்று மருத்துவமனைகளில் மேலும் ஏழு உயிரிழப்புகள் பதிவான நிலையில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
» வன்முறை பேச்சு; வழக்குப்பதிவு செய்ய ஒரு மாத கால அவகாசம்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
எனினும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியல் முழுமையான அளவில் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அஞ்சப்பட்டுவரும் நிலையில், வெளியே சென்ற தங்கள் உறவினர்கள் இந்தக் கலவரத்தில் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் ஜிடிபி மருத்துவமனையின் எதிரே காத்திருப்பவர்களும் இதில் உண்டு.
2 நாட்களாகக் காத்திருக்கிறோம்
கலவரத்தில் உயிரிழந்த 35 வயதான முடசிர் கானின் உடலைப் பெற அவரது உறவினர்கள் காத்திருக்கின்றனர். முடசிர் கான், பிளாஸ்டிக் ஸ்கிராப் உற்பத்திப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வடகிழக்கு டெல்லியின் கர்தாம்புரி பகுதியில் வசித்து வந்தார்.
முடசீர் திங்களன்று கர்தாம்பூரியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே இருந்தபோது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் தலையில் புல்லட் காயம் ஏற்பட்டது. பிறகு ஜிடிபி மருத்துவமனையின் மருத்துவர்கள் முடசீர் இறந்ததாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முடசீரின் உறவினர் கூறுகையில், ''எங்கள் உறவினர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. யாரும் நிம்மதியாகத் தூங்க முடியாது. இன்னும் பயம் இருக்கிறது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். நாங்கள் எங்கள் வாகனங்களைக் கூட பயணத்திற்குப் பயன்படுத்துவதில்லை. மூன்று நாட்களுக்குள் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம்,'' என்றார்.
உயிரிழந்த முடசீர் கானின் மருமகன் அர்பாஸ் கான் கூறுகையில், “நாங்கள் கடந்த இரண்டு நாட்களாக இங்கு வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் எங்கள் உறவினரின் உடலைப் பெற முடியவில்லை. கோப்புகள் தயார் என்றும், பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் நேற்று ஐ.ஓ. கூறினார். இன்று, நாங்கள் காலை 8 மணி முதல் இங்கு காத்திருக்கிறோம், பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. உடலை விரைவில் பெறுவோம் என்று நம்புகிறோம். இறுதிச் சடங்குகளை இன்றே நடத்துவோம்,'' என்றார்.
எப்போது பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்? யாராவது சொல்வார்களா?
முஸ்தபாபாத்தில் வசிக்கும் அர்பாஸ், ''ராணுவப் பாதுகாப்புடன் கலவரம் குறைந்து எங்கள் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் இன்னும் அச்சம் உள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய விவரங்களைப் பெற கவலையுடன் மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள்.
அவர்களில் சிலர், பிரேதப் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்று காவல்துறையோ அல்லது மருத்துவமனை அதிகாரிகளோ சரியாகச் சொல்லவில்லை என்று வருத்தத்தில் உள்ளனர்'' என்றார்.
22 வயது ஷாபாஸ் மாயம்?
பிப்ரவரி 25 முதல் காணாமல் போன 22 வயது ஷாபாஸின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள், தங்கள் மகன் உயிருடன் இருக்கிறாரா என்று தெரிந்து கொள்வதற்காக ஜி.டி.பி. மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு வெளியே காலையில் இருந்து காத்திருக்கிறார்கள்.
மகனைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த தாய் கூறுகையில், “சில வெல்டிங் வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது என் மகன் கண்களில் காயம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் என் மகன் கரவால் நகருக்கு கண் சிகிச்சைக்காகச் சென்றிருந்தான். பிற்பகல் 3 மணியளவில் நான் அவனை அழைத்தபோது, அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, ” என்றார்.
ஷாபாஸின் உறவினர் ஒருவர் கூறுகையில், ''ஷாபாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் லோனியில் வசித்து வருகிறார்கள், அப்பகுதியில் ஒரு வெல்டிங் கடையில் வேலை செய்துவந்தார். அவர் இருக்கும் இடத்தை அறிய மூன்று நாட்களாக ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்குச் சென்று வருகிறோம். அலைச்சல்தான் மிஞ்சியது. நாங்கள் காலையிலிருந்து இங்கு வந்துள்ளோம், இன்னும் ஷாபாஸைப் பற்றி எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார்.
திகிலான சம்பவம்
முஷாரஃப்பின் குடும்பம் இரண்டு நாட்களாகவே ஜி.டி.பி.யில் உள்ள சவக்கிடங்கின் வெளியே அங்கிங்கும் நகராமல் காத்திருக்கின்றனர். முஷாரஃப் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோகல்பூரியின் பாகீரதி விஹார் பகுதியில் வசித்து வந்தார்.
தன் கணவர் இறந்தது குறித்து முஷராஃப்பின் மனைவி கூறுகையில், ''எங்கள் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று கூச்சலிட்டவாறே, என் கணவரைக் கொடூரமாகத் தாக்கினர். அவர்கள் அவரை எங்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வந்து அடித்துக்கொண்டே இருந்தார்கள். என் கணவரை அவர்கள் அடித்தே கொன்ற சம்பவத்தை நினைக்கும்போதே திகிலாக இருக்கிறது. எனது கணவருக்கு என்ன நடந்தது என்ற கதைகளை இங்குள்ள அனைவருக்கும் நான் விவரித்து வருகிறேன். பிரேதப் பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்று யாரும் எங்களிடம் கூறவில்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago