இந்தியா

‘‘ட்ரம்ப் வருகையிலும் அரசியல் செய்வதா?’’-  கேஜ்ரிவாலுக்கு பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

அமெரிக்க அதிகாரிகளும், தலைவர்களும் வருகை தருவது அவர்களது விருப்பம். அவர்களுடன் யார் செல்ல வேண்டும் என்பதையும் மத்திய அரசு முடிவு செய்வில்லை என பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்துகொள்ளும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர்.

அகமதாபாத்தில் வாகனத்தில் ட்ரம்பும், பிரதமர் மோடியும் பேரணியாக செல்கின்றனர். இரு தலைவர்களுக்கும் அகமதாபாத் மக்கள் வரவேற்பளிக்கின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள 1.10 லட்சம் இருக்கைகள் கொண்ட மோதேரா மைதானத்தில் நடைபெறும் ‘‘நமஸ்தே ட்ரம்ப்’’ என்ற பெயரி்ல் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமின்றி டெல்லியில் அரசு பள்ளி ஒன்றை மெலினா ட்ரம்ப் பார்வையிடுகிறார். அப்போது அரசு பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் மாநில துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியாவும் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் மெலினா ட்ரம்ப் பங்கேற்கும் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியலில் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அரசு வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன. இருப்பினும் மத்திய அரசு தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் இதுபற்றி பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:

மெலினா ட்ரம்ப் டெல்லி பள்ளிக்கு செல்வது அவரது விருப்பத்தின் பேரில் மத்திய அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி. இதில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யவில்லை. அமெரிக்க அதிகாரிகளும், தலைவர்களும் வருகை தருவது அவர்களது விருப்பம். அவர்களுடன் யார் செல்ல வேண்டும் என்பதையும் மத்திய அரசு முடிவு செய்வில்லை.

இது நன்கு தெரிந்து இருந்தும் இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியும் கீழ்த்தரமான அரசியல் செய்கிறது. பள்ளிக்கு செல்லுவோர் பட்டியலில் இருந்து கேஜ்ரிவால் பெயரை நீக்குமாறு மத்திய அரசு சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT