டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி வெற்றியும்; காங்., தோல்வியும்: ஓர் ஒப்பீட்டுப் பார்வை

By பாரதி ஆனந்த்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆம் ஆத்மி. கருத்துக்கணிப்புகள் எல்லாம் வெற்றி ஆம் ஆத்மிக்கு என்றே கை காட்டியிருந்தபடியே நடந்திருந்தாலும் அந்த வெற்றி ஒரு 'கேக் வாக்' போல் சாத்தியாமனதன் பின்னணியில் சாதனைகள் பல இருக்கின்றன என்பதை மறுத்துப் பேசுவதற்கில்லை.

200 யூனிட் வரை இலவச மின்சாரம், வீடுகளுக்கு 20,000 லிட்டர் இலவச குடிதண்ணீர், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், இலவசக் கல்வி, மொஹல்லா கிளினிக் திட்டம், முதியவர்கள் பராமரிப்புக்கு ரூ.2500 என்று பட்டியலிட நிறைய சாதனைகள் இருக்கின்றன.

ஆம் ஆத்மியின் மகத்தான வெற்றி குறித்து அக்கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் கூறும்போதும் இவற்றைத்தான் பட்டியலிடுகிறார்.

இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "ஆம் ஆத்மியின் வெற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதை உரக்கச் சொல்லியுள்ளது. கடந்தமுறை மக்களை வாக்குறுதிகளுடன் சந்தித்தோம். இந்த முறை நாங்கள் தேர்தலை சாதனைகளுடன் சந்தித்தோம். அதற்கு மக்கள் பரிசாக வெற்றியைத் தந்துள்ளனர். இந்த வெற்றி இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதல்வர்களுக்கும் மிகப்பெரிய பாடம். மக்களுக்குத் தேவையற்ற இலவசங்களைக் கொடுக்காமல் அரசியலில் நேர்மையாக இருந்தால், மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தால் தேர்தல் சவால் அல்ல, பூப்பாதையில் ஒரு பயணம்" என்றார்.

ஆம் ஆத்மி வெற்றிக்கு வித்திட்ட அரசுப் பள்ளிகள்..

டெல்லியில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியில் தனியார் பள்ளிகள் 93% வெற்றியைப் பதிவு செய்த நிலையில் அரசுப் பள்ளிகள் 96.2% வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐஐடி நுழைவுத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஐஐடியில் இடம் பிடிக்க வழி செய்துள்ளது.

தரமான வகுப்பறை, 20,000 வகுப்பறைகளில் ஏசி வசதி, சுத்தமான கழிவறை வசதி, குடிதண்ணீர் வசதி, திறன்வாய்ந்த ஆசிரியர்கள் என்ற சிறப்பம்சங்கள் கொண்ட டெல்லி பள்ளிகளை மாதிரியாக மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று கல்வியாளர்களே பரிந்துரைக்கின்றனர். டெல்லியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 65% ஆக அதிகரித்துள்ளது. ஆகவே, ஆம் ஆத்மியின் வெற்றியில் கல்வித்தர மேம்பாடு முதலிடத்தில் நிற்கிறது.

அடுத்துவருவது டெல்லி மக்களுக்குச் செலவில்லாமல் மருத்துவ வசதி தரும் சமுதாய ஆரம்ப சுகாதார மையங்களான மொஹல்லா கிளினிக் திட்டம். ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் ஒரு சுகாதார மையம் என்ற இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும் அவை அமைந்துள்ள இடங்களில் எல்லாம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது. இத்திட்டம் டெல்லி முழுவதும் விரைவில் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

இலவசங்கள் பயனுள்ளதாக இருக்க வேண்டும்..

மக்களுக்கான இலவசங்கள் வெறும் பொருளாக இல்லாமல் சேவையாக இருக்க வேண்டும். அதுவே நீடித்த பலனைத் தரும் என்பதை நிரூபித்திருக்கிறது வீடுகளுக்கு 20,000 லிட்டர் இலவச குடிதண்ணீர் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டங்கள். இவை நடுத்தர, ஏழை குடும்பத்தினரின் வாக்குகளை பெருவாரியாக ஆம் ஆத்மியின் பக்கம் திருப்பியுள்ளது எனலாம்.

அதேவேளையில் ஆம் ஆத்மியின் மீது விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஜேஎன்யு போராட்டம், ஜாமியா போராட்டங்களில் ஆம் ஆத்மி விலகி நின்றதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்து ஆம் ஆத்மியின் வசீகரன் பேசும்போது, "நாங்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டு வாக்கு கேட்டோம். மக்களும் வாக்களித்துள்ளார்கள். மற்றபடி எங்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் அர்த்தமற்றவை. சிஏஏ, என்ஆர்சியை ஆம் ஆத்மி எதிர்க்காமல் இல்லை. நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை மீதும், பொருளாதார நெருக்கடி குறித்தும் கவனம் செலுத்துமாறு கேஜ்ரிவால் அறிக்கை வெளியிட்டார். நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நலப் பணியைத் தொடர வேண்டும் என்ற இலக்கில் இருந்ததால் சாதுர்யமாக வலையில் சிக்காமல் இருந்தோம். இப்போது ஆட்சிக்கு வந்துவிட்டோம் இனி நிச்சயமாக இவ்விவகாரங்களில் முழுவீச்சில் எங்கள் பலத்தைக் காட்டுவோம்" என்றார்.

கட்சி தொடங்கி வெறும் 8 ஆண்டுகளில் இரு பெரும் தேசியக் கட்சிகளுக்கு மிகப் பெரிய சவாலாக உருவாகியுள்ளது ஆம் ஆத்மி. இதற்கு முழுக்க முழுக்க மக்கள் அபிமானமே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மியின் அடையாளமாக அர்விந்த் கேஜ்ரிவால் பிரகாசிக்கிறார்.

டெல்லி வெற்றியை ஒரு புதுவிதமான அரசியல் பிறப்பு என்று கேஜ்ரிவால் வகைப்படுத்துகிறார். எளிமையான மொழியில் சொல்ல வேண்டுமானால் இது மக்கள் அபிமான அரசியல் தான்.

ஒப்பீட்டுப் பார்வை..

8 ஆண்டுகளில் ஆம் ஆத்மிக்கு இத்தகைய பெரிய வீச்சு சாத்தியமானது என்றால் இந்தியாவை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்தது தொடங்கி 135 ஆண்டுகள் நீண்ட வரலாற்றுடன் தொடர்ந்து டெல்லியில் 3 முறை ஆட்சி என்று கோலோச்சிய காங்கிரஸின் சறுக்கலுக்கு என்ன காரணமாக இருக்க வேண்டும் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

அதற்கு டெல்லி காங்கிரஸ் மீதான மக்களின் செல்வாக்கு குறைந்ததே பிரதான காரணம் என்ற அழுத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது. அதேபோல் ஷீலா தீட்சித் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் தனது அடையாளமாக எந்த ஒரு முகத்தையும் டெல்லியில் முன்னிறுத்தவில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

டெல்லியைப் பொறுத்தவரை மக்களுக்கான அரசியல் கட்சியும் மக்கள் மறந்துபோன அரசியல் கட்சியுமாக ஒப்பீட்டு அளவில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இருக்கின்றன.

அதனால், காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து அரசியல் நோக்கர்கள் பலரும் முன்வைக்கும் கருத்தும் இப்போதைக்கு அக்கட்சிக்கு சுயபரிசோதனை தேவை என்று பரிந்துரைக்கப்படுகிறது.

சாமான்யர்களின் முகம் என்று கேஜ்ரிவால் தன்னை டெல்லியில் நிலைநிறுத்தியதோடு அந்த வெளிச்சத்தை நாடு முழுவதும் பாய்ச்ச ஆயத்தமாகும் வேளையில் ஏற்கெனவே அறியப்பட்ட முகங்களான ராகுல், பிரியங்காவால் ஏன் டெல்லிக்கு வெற்றியைப் பெற்றுத்தர இயலவில்லை என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ராகுல், பிரியங்கா மீதான விமர்சனங்கள்..

இங்குதான், டெல்லி தோல்வி மட்டுமல்லாத தேசிய அளவில் இனி மீண்டெழ காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும் என்பதை பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் அனுதாபி ஒருவர் பதிவு செய்தார்.

அவர் கூறுகையில், "அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தபோது காலை 9 மணிக்கு கட்சி அலுவலகம் வந்துவிடுவார். இரவு 11 மணி வரை அங்குதான் இருப்பார். பொதுச் செயலாளர் தொடங்கி ஏதோ ஒரு மாநிலத்தின் மாவட்டச் செயலாளர் வரை அமித் ஷாவைப் பார்த்துவிட முடிந்தது. அவர் அமைச்சரானப் பிறகு நட்டாவை அந்த பொறுப்பில் அமர்த்தியுள்ளார். ஆனால், காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுலையோ, பிரியங்காவையோ நீங்கள் பார்க்க முடியாது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்களைப் பார்ப்பதற்குக் கூட முன் அனுமதி வேண்டும். இப்படி அணுகுவதற்கே கெடுபிடி இருக்குமிடத்தில் அரசியல் எப்படி வளரும்?" என்றார்.

அதேபோல் பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக உடனே முன்னிறுத்துவதில் சிக்கல் தான் இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

"பிரியங்கா காந்தி இப்போதுதான் உத்தரப் பிரதேசத்தில் சற்றே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறார். அவர் முன் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை மீட்டெடுப்பது என்ற மிகப்பெரிய சவால் இருக்கிறது. அதற்கு அவருக்கு குறைந்தது 5 ஆண்டுகளாவது தேவைப்படும். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸை மீட்டெடுத்துவிட்டால் இந்தியா முழுவதும் மீட்டுவிடலாம். அந்தப் பணிக்கு இப்போதுதான் பூர்வாங்க வேலைகள் நடைபெறுகின்றன. அங்குள்ள இளைஞர்களின் நம்பிக்கையை வெல்லும் முயற்சியில் பலன் பெற்றுவருகிறார். அவர் ஒரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது திடீரென இந்தியத் தலைமைப் பொறுப்பு என்பது சிக்கலாகவே முடியும்" எனக் கூறுகிறார்.

காங்கிரஸ் தோல்வி குறித்த கருத்துகள் பல்வேறு பக்கத்திலிருந்தும் பலவிதமாக வந்து கொண்டிருக்கும் சூழலில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி - 63, பாஜக- 7, காங்கிரஸ்- 00 என்ற முன்னிலை நிலவரம் (இந்த செய்தியைப் பதிவு செய்த நேரத்தின்படி) காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை சரிசெய்ய வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருக்கிறது" என்பதை உறுதிப்படுத்துகிறது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்