3 தலைநகரம் பற்றி ஆந்திர பேரவையில் விவாதம்: அமராவதியில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தடியடி

By என்.மகேஷ்குமார்

ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் குறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் இதற்கான மசோதா மீது ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்குமிடையே கடுமையான விவாதம் நடந்தது.

இதனிடையே, அமராவதியை மட்டுமே தலைநகராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சட்டப்பேரவையை முற்றுகையிட முயற்சித்ததால், போலீஸார் தடியடி நடத்தினர். நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் கம்யூனிஸ்ட், ஜனசேனா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரை போலீஸார் கைது செய்தனர்.

அமராவதி மட்டுமே தொடர்ந்து தலைநகரமாக நீடிக்க வேண்டுமென கடந்த 33 நாட்களாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று, 3 தலைநகரங்களா அல்லது அமராவதி மட்டுமே தலைநகரமா ? என்பதை தீர்மானிக்கும் விதத்தில், அமராவதியில் சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் தலைமையில் 3 நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில், அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதாவை நிதி அமைச்சர் பி.ராஜேந்திர நாத் அவையில் முன் வைத்து பேசினார். அமராவதியில் சட்டப்பேரவை, விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகம், ராஜ்பவன், கர்னூலில் உயர் நீதிமன்றம் அமைப்பதால், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெறும் என அமைச்சர் ராஜேந்திரநாத் பேசினார். இவரை தொடர்ந்து பேசிய முதல்வர் ஜெகனும், இதே கருத்தை வலியுறுத்தினார்.

ஆனால், இதனை எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக எதிர்த்தார். ‘‘மாநிலத்தின் மையப்பகுதியில் அனைவரின் ஒப்புதலின் பேரில் அமராவதி தலைநகரம் செயல்பட்டு வருகிறது. இதனை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட ஜெகன்மோகன் ரெட்டியும் ஒப்புக்கொண்டார். ஆனால், தற்போது அந்த தலைநகரை வேண்டாம் எனவும், 3 தலைநகரங்கள் இருந்தால் மாநிலம் முழுவதும் வளர்ச்சி பெறும் என்றும் தலைநகர் பிரச்சினையை அரசியலாக்குகிறார்.

என் மீது உள்ள கோபத்தால், தலைநகரை மாற்றப்பார்க்கிறார். தலைநகருக்காக தாமாக முன் வந்து நிலம் வழங்கிய விவசாயிகளின் நிலைமை என்னவாவது ?  கிருஷ்ணன் கமிட்டி அறிவித்தபடி அமராவதி நகரம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறினால் தலைநகரம் மாறுமா? ஏற்கெனவே, அமராவதியில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றமும் இங்கு செயலாற்றி வருகிறது. இந்நிலையில், அமராவதியில் மீதமுள்ள பணிகளை இந்த அரசு செய்ய வேண்டுமே தவிர, அதற்காக தலைநகரை மாற்றக் கூடாது. இதனை தெலுங்கு தேசம் கட்சி ஒப்புக்கொள்ளாது என கூறினார். இவரை போன்றே தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் 3 தலைநகரங்களுக்கான மசோதாவை எதிர்த்து பேசினர். ஆனால், மெஜாரிட்டி அதிகம் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 3 தலைநகரங்கள் தேவை என பேசினர்.

அமைச்சரவை ஒப்புதல்

முன்னதாக அமராவதியில் நேற்று காலை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் 3 தலைநகரங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், தற்போதுள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாநிலத்தில் 4 இடங்களில் ஆட்சி மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

3 தலைநகரங்கள் குறித்த மசோதா நேற்று அமராவதியில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு அமராவதியில் உள்ள 29 கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே அறிவித்தபடி, சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை நடத்தினர். இதனால், நேற்று விஜயவாடா-குண்டூர் இடையே அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயினும் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றவாறு பேரவை முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களை தடுக்கும் விதத்தில் வழி நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால், பல இடங்களில் போலீஸாருக்கும், பொதுமக்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதில் மந்தடம் என்ற இடத்தில் அத்துமீறி பேரவையை நோக்கிச் செல்ல முயன்ற பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பல பெண்கள் காயமடைந்தனர். இதேபோன்று மங்களகிரி, வெலகபுடி, தூளூரு போன்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். ஆயினும் 144 தடை உத்தரவை மீறி, சட்டப்பேரவையை 2வது கேட் பகுதியில் பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குண்டூர் எம்பி கல்லா ஜெயதேவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

பெண்கள், சிறுவர்கள், ஊடகத்தினர் என அனைவரின் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் போலீஸாரை எதிர்த்து நேற்று இரவு வரை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அமராவதியில் மட்டுமல்லாது, ஆந்திர மாநிலம் முழுவதிலும் உள்ள தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட், ஜனசேனா கட்சி நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். இதில் பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்