குடியரசு தின விழா அலங்கார ஊர்திப் பேரணியில் பங்கேற்பதில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இந்த விவகாரத்தில், பாஜக ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்தி விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெறும். அப்போது இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மாநிலங்களின் கலாச்சாரங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறும்.
மாநில அரசுகளின் அலங்கார ஊர்தியின் வடிவமைப்பு, மையக் கருத்து, கரு, அதன் காட்சித் தாக்கம் உள்ளிட்டவற்றை நிபுணர்கள் அடங்கிய ஆய்வுக் கமிட்டி ஆய்வு செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். பின் அதிலிருந்து குடியரசு தினப் பேரணியில் இடம் பெறும் மாநிலங்களின் அலங்கார ஊர்திப் பட்டியல் தயாரிக்கப்படும்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா பேரணியில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது தொடர்பாக 32 மாநிலங்கள் மற்றும் யூனியன், 24 அமைச்சகங்களிலிருந்து மொத்தம் 56 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 22 விண்ணப்பங்கள் மட்டும் இறுதி செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இப்போது இந்த மூன்று மாநிலங்களும் தங்களுக்குக் குடியுரசு தின ஊர்தி ஊர்வலத்துக்கு அனுமதிக்காதது குறித்து மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், "மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முதல்வர் மம்தா நிலைப்பாடு எடுத்திருப்பதாலும், தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நிறுத்தியதாலும் மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு இடமளிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத், என்சிபி தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதாலும், பாஜக அல்லாத மாநிலம் என்பதாலும் குடியரசு தின விழா அணிவகுப்புக்கு தங்களுக்கு இடமளிக்கவில்லை" எனக் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால், இந்த மாநிலங்களின் குற்றச்சாட்டை மத்திய மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், "முறையான தேர்வு நடைமுறை காரணமாகத்தான் அந்த மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பாஜக ஆளும் ஹரியாணா, உத்தரகாண்ட், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்தி கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
34 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago