பிரதமர் மோடியால் உலக அளவில் பிரபலம் அடையும் குஜராத்தி உணவு

By ஆர்.ஷபிமுன்னா

அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடியால் குஜராத்தி உணவு உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

இந்திய உணவுகளில் தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமடைந்திருப்பது தென்னிந் தியாவின் இட்லி, சாம்பார் மற்றும் தோசை தான். இத்துடன் சமீபத்தில் சர்வதேச சமையல் போட்டியில் முதல் பரிசு பெற்ற ரவை உப்புமாவும் இணைந்துள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது குஜராத்தி உணவும் இணையும் நிலையில் உள்ளது. இதற்கு வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லும் பிரதமர் மோடிக்கு அங்கு அளிக்கப்படும் விருந்தில் குஜராத்தி உணவுகள் தவறாமல் இடம்பெறுவதே காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு அன்று இரவு பட்டத்து இளவரசர் ஷேக் நயான் விருந்து அளித்தார். இதில் முதன் முறையாக ஒரு முழுமையான ’குஜராத்தி தாளி’ உணவு பரிமாறப்பட்டுள்ளது.

இந்த விருந்தில், மோடியுடன் இந்திய அதிகாரிகள் சிலருக்கு சைவமும் மற்றவர்களுக்கு அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டன. சைவ உணவில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் ‘ராஜபோக தாளி’ பரிமாறப்பட்டது. இதன் தொடக்கத்தில் குஜராத்தின் சிறப்பு பண்டமான ‘டோக்லா’ இருந்தது.

இதன் பிறகு, தந்தூரி முறையில் சுட்டு தயாரிக்கப்பட்ட ‘தந்தூரி ஷோக்’ எனும் காய்கறிகள் பரிமாறப்பட்டன. இஞ்சியின் சுவையில் தயாரான ‘சப்ஜி அத்ரக்கி ஷோர்பா’ எனும் காய்கறி குழம்பு, எலுமிச்சை சுவையிலான பாசுமதி அரிசி. இத்துடன், மாம்பழ இனிப்பு ரசத்துடன் பூரி, சிறுதானியமான கம்புவில் செய்த ரொட்டி வகைகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்கு தொட்டுக்கொள்ள குஜராத்தின் சிறப்பு வகைகளான பூண்டு சேர்த்து அவிக்கப்பட்ட உருளைக்கிழங்கின் ‘லெசுனியா படாக்கா’, மோர்க்குழம்பு வகையை சேர்ந்த ‘குஜராத்தி கடி’, சேப்பங்கிழங்கு இலையில் செய்யப்பட்ட ’உந்தியூ’, கேரட்டின் ‘காஜர் மிர்சானா சம்பாரோ’ ஆகியவை இருந்தன. இவற்றுடன் மாங்காயின் இனிப்பு ஊறுகாய், தயிர், மோர், அப்பளம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.

இதை தயாரிப்பதற்காகவே அரபு ஷேக்குகள் மத்தியில் நன்கு அறிமுகமான சஞ்சீவ் கபூர் இந்தியாவில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டார். இவர் இந்திய உணவு வகைகளுக்காக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளில் ‘சிக்னேச்சர்’ எனும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பிரதமர் இதுவரை சென்ற அனைத்து நாடுகளிலும் அவருக்கு சைவ உணவே பரிமாறப்பட்டது. இதில், குஜராத்தின் டோக்லா தவறாமல் இடம் பெற்றது. இந்தமுறை, ஐக்கிய அமீரக அரசு சார்பில் அவருக்கு சிறப்பான உணவளிக்க விரும்பி எங்களிடம் கேட்டதால் குஜராத்தி வகை பரிந்துரைக்கப்பட்டது.

இதை சுவைத்து உண்ணும் போது அதை தயாரித்தது சஞ்சீவ் கபூர் என தெரிந்து கொண்ட மோடி, அவரை அழைத்து பாராட்டினார். குஜராத்தி உணவுக்காக கபூரின் வரவை விகாஸ் சொரூபும் முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து விட்டதால் குஜராத்தி உணவு மேலும் பிரபலமாகி விட்டது” என்று தெரிவித்தனர்.

கடலை மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து இட்லியை போல் அவித்து தயாரிக்கப்படும் குஜராத்தி வகை உணவின் முக்கிய பண்டமான டோக்லா, மத்திய அமைச்சகங்களில் உள்ள சிற்றுண்டிகளிலும் வரத் தொடங்கி உள்ளது. இதனை விற்பனை செய்ய, நாடு முழுவதிலும் செயல்படும் 723 சிற்றுண்டி விடுதிகளுக்கும் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதனால் டெல்லி உட்பட நாட்டில் அரசு மானியம் பெறாத பெரும்பாலான சிற்றுண்டி விடுதிகளில் டோக்லா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்