குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை பாஜக விமர்சித்தது. இந்நிலையில் மாநில சட்டப்பேரவைகளுக்கு தனிச்சிறப்பு உரிமை இருக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநிலத்திலும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கட்சி வேறுபாடின்றி பாஜகவைத் தவிர்த்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும், ஆளும் இடதுசாரிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
இதற்கிடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிக்கவும் ஒரு நாள் சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டுவந்து கேரள அரசு நிறைவேற்றியது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரைவில் முதன்முதலாக கேரள அரசுதான் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது.
ரவிசங்கர் பிரசாத் கண்டனம்
கேரள அரசு சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய சில மணிநேரங்களில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, "கேரள முதல்வர் பினராயி விஜயன் சிறந்த சட்ட வல்லுநரைக் கலந்தாய்வு செய்வது நல்லது. ஏனென்றால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது பட்டியலில் இருக்கிறது. இதை நீக்குவதற்கும், புறக்கணிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. நாடாளுமன்றம் மட்டுமே இதற்குத் தனி அதிகாரம் படைத்தது. சட்டப்பேரவை அல்ல, அது கேரள சட்டப்பேரவையாக இருந்தாலும் அதிகாரம் கிடையாது" எனத் தெரிவித்தார்.
பாஜக எம்.பி. புகார்
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைச் செல்லாது, ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது நாடாளுமன்றச் சிறப்பு உரிமைக்கு எதிரானது. ஆதலால், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கண்டன நடவடிக்கை எடுக்கக் கோரி மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு பாஜக எம்.பி. ஜிவிஎல். நரசிம்மா ராவ் புகார் கடிதம் எழுதியுள்ளார்.
சிறப்பு அதிகாரம்
இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "ஒவ்வொரு மாநிலச் சட்டப்பேரவைக்கும் சிறப்பு உரிமை இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளையும், பேச்சையும் எங்கும் கேட்டதில்லை. தற்போதுள்ள சூழலில் எதையும் நாங்கள் உதாசினப்படுத்த முடியாது.
எப்போதும் இல்லாத சம்பவங்கள் இந்த தேசத்தில் சமீபகாலமாக நடக்கின்றன. சட்டப்பேரவைக்கு என அரசியலமைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அதை ஒருபோதும் மீறக்கூடாது. கேரள மாநிலம்தான் முதன்முதலில் சிஏஏ சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. ஏனென்றால் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகிறது. அடிப்படை உரிமைகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago