முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. கைபிடித்த மூத்த குடிமக்கள்..


By செய்திப்பிரிவு

என்.சுவாமிநாதன்

கேரளத்தின் ராமவர்மபுரம் முதியோர் இல்லம் கொச்சானியன் மேனன்(67), லெட்சுமி அம்மாள்(65) திருமணத்துக்காக சனிக்கிழமை வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிவப்புபட்டு உடுத்தி, தலைநிறைய மல்லிகைப்பூவோடு லெட்சுமியும், கேரள பாரம்பரிய வேட்டி, சட்டையில் கொச்சானியனும் மணப்பந்தலில் இருந்தனர்.

லெட்சுமியின் உள்ளங்கையில் மருதாணி அலங்காரமும் வசீகரித்தது. கேரள மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் சுனில்குமார்தான் முன்னின்று இந்த வயோதிக தம்பதிகளின் திருமணத்தை நடத்திவைத்தார். இந்த திருமணத்தின் பின்னால் 30 ஆண்டுகள் பந்தமும் இருக்கிறது.

லெட்சுமி அம்மாளின் கணவர் கிருஷ்ணய்யர் திருச்சூரில் பிரசித்திபெற்ற சமையல்கலை வல்லுனராக இருந்தார். அவரிடம் உதவியாளராக கொச்சானியன் மேனன் இருந்தார். கிருஷ்ணய்யர் உடல்நலமின்மையால் 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

அதன்பின்னர் நடந்தவற்றை இப்போதும் ஆச்சர்யம் விலகாமல் விவரிக்கிறார் லெட்சுமி. ‘‘என் கணவருக்கு உடல்நலக் குறைவு இருக்கும்போதே ‘என்காலத்துக்கு பின்னால் என்மனைவியை நன்றாக பார்த்துக்கொள்’ என அடிக்கடி மேனனிடம் சொல்லுவார். அவர் இறந்தபின்பு வீட்டில் தனிமையில் வசித்தேன்.

எனக்கு எதுவும் உதவி தேவைப்பட்டால் மேனன் வந்து செய்துதருவார். ஒருகட்டத்தில் நான் இருந்த வீட்டை விற்றுவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டில் குடியேறிவிட்டேன். அப்போதும் என் கணவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடிக்கடி வந்து என்னை மேனன் நலம் விசாரித்து செல்வார்.

ஒருகட்டத்தில் அவர் திடீரென என்வீட்டுக்கு வருவது நின்றுபோனது. நானும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்துவிட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென ஒருநாள் இதேஇல்லத்தில் புதிதாக மேனனையும் சந்தித்தது ஒருகனவுபோல் இருக்கிறது’’ என சொல்லி நெகிழ்கிறார் லெட்சுமி.

கொச்சானியன் மேனனுக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டது. மனைவியை இழந்த இவர், துவக்கத்தில் மகன்களின் இல்லத்தில் வாழ்ந்தார்.

ஒருகட்டத்தில் வயநாடு பகுதியில் உள்ள அரசு முதியோர் காப்பத்தில் சேர்க்கப்பட்டார். இடப்பற்றாக்குறை காரணமாக அங்கிருந்து இருமாதங்களுக்கு முன்புதான், திருச்சூர், ராமவர்மபுரம் இல்லத்துக்கு மாற்றப்பட்டார். அப்போது எதேச்சையாக இருவரது சந்திப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்த சந்திப்புக்கு முன்பு இருவரும் திருமண பந்தம் பற்றிப் பேசியதே இல்லை.

இருவரும் தங்களுக்குள் அதுகுறித்து வெளிப்படுத்திக் கொள்ளாமலே ஒருவரையொருவர் மிகவும் நேசித்திருக்கின்றனர். ஏற்கெனவே முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனிமையாக உணர்ந்த லெட்சுமிக்கு, மேனனின் வரவு வசந்தத்தைக் கொடுத்தது. அப்போதுதான் தங்களது அன்பை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல நினைத்து இருவரும் திருமணம் செய்துகொள்வது குறித்து முடிவுசெய்தனர்.

கைகொடுத்த இல்லம்

திருமண முடிவை முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் இருவரும் சொல்ல அவர்தான் இவர்களின் எண்ணத்துக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். தம்பதி இருவரும் அரசு முதியோர் காப்பகத்தில் இருந்ததால் திருமணத்துக்கு அரசுமட்டத்தில் பல அதிகாரிகளிடமும் ஒப்புதல் பெறவேண்டி இருந்தது.

அரசு முதியோர் முகாம்களில் வாழ்பவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்ய முடிவு செய்தால், அதில் சிக்கல்கள் இல்லையென்றால் திருமணம் செய்துவைக்கலாம் என கேரளஅரசு முன்னரே தெளிவுபடுத்தியிருந்த வழிகாட்டி நெறிமுறைகளும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியது.

சனிக்கிழமை நடந்த திருமணத்துக்குபின் கேரள பாரம்பரிய மதியவிருந்து பரிமாறப்பட்டது. முந்தையநாளில் மெகந்தி விருந்து, இன்னிசை இரவு என களைகட்டியது. கேரள வேளாண்மைத்துறை அமைச்சர் சுனில்குமார், திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷாநவாஸ் என முக்கியப்புள்ளிகள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணத்துக்கு பின்னர் மணமக்கள் கன்னத்தில் முத்தமிட்டு பரஸ்பரம் மகிழ்ச்சியை வெளிக்காட்ட கூடியிருந்தவர்களின் கைதட்டலில் வெட்கத்தில் முகம் சிவந்தார் லெட்சுமி அம்மாள்.

திருமணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் சுனில்குமார், ‘‘என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் இதுவும் ஒன்று. அவர்களின் திருமண வாழ்வு அமைதியாகவும், நலமாகவும் இருக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்