பிரதமர் மோடியை விட முஸ்லிம்கள் நலன் மீது அக்கறை உள்ளவர்கள் யாருமில்லை: மத்திய அமைச்சர் பொக்ரியால் பேச்சு

By பிடிஐ

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்கள் அரசியல் செய்யும் மையங்களாக மாறுவதைப் பார்த்து மத்திய அரசு பொறுத்துக் கொண்டிருக்காது என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எச்சரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மேற்கு வங்கம், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாவத்பூர் பல்கலைக்கழகம், அலிகர் பல்கலைக்கழகம், பிரசிடென்ஸி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்து, தடியடியும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கொல்கத்தாவில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் அரசியல் மையங்களாக மாறுவதை மத்திய அரசு பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்காது.

மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினால், பல்கலைக்கழகங்கள், கல்லூரிப் படிப்பை விட்டுவிட்டு தாராளமாக வெளியேறி ஈடுபடலாம் அதில் தடையில்லை. ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு ஏராளமான மாணவர்கள் கனவுகளுடன் வெகு தொலைவில் இருந்து படிக்க வருகிறார்கள். அவர்கள் நலனைப் பார்க்க வேண்டும். நரேந்திர மோடி அரசு இந்த விஷயங்களை எந்த சூழலிலும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்காது.

காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்புகிறது. நாட்டை மதரீதியாகப் பிரிக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் எம்.பி.யாக இருந்த காலத்தில், 2005-ம் ஆண்டில் சட்டவிரோத குடியிருப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஆனால், இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேசுகிறார்.

புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டின் உயர்ந்த மதிப்புகளை ஒன்று சேர்க்கும் விதத்தில் கல்விக்கொள்கை அமையும். 33 ஆண்டுகள் இடைவெளியில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்படுகிறது. அறிவியல், தீவிர ஆய்வு செய்தல், அறிவு ஆகியவற்றை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் விதத்தில் புதிய கல்விக் கொள்கை அமையும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் மதச் சிறுபான்மை மக்களுக்கு நாம் குடியுரிமை அளிக்கிறோம் என்றால் அந்த 3 நாடுகளும் மதச்சார்பின்மை இல்லை என்று அர்த்தம். இந்தியப் பிரிவினையின்போது, இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், கிறிஸ்தவர்கள் என 23 சதவீதம் பாகிஸ்தான் மக்கள் தொகையில் இருந்தார்கள். ஆனால், தற்போது 3 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள்.

நான் மம்தாவிடம் கேட்கிறேன். இந்த மதச்சிறுபான்மை மக்கள் என்ன ஆனார்கள், காங்கிரஸ் கட்சி இதற்குப் பதில் அளிக்க வேண்டும். கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார்களா, அல்லது நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார்களா அல்லது கொல்லப்பட்டார்களா?

நாம் சுதந்திரம் பெறும்போது இந்தியாவில் 9 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை தற்போது 14 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை எதிர்க்கட்சிகள் உதாரணமாகக் காட்டுகின்றன. ஆனால், அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்த நாட்டு மக்களுக்காகத்தான், உலகம் அனைத்துக்கும் இந்தியா கருணை இல்லம் இல்லை.

இந்தியாவைக் காட்டிலும், பிரதமர் மோடியைக் காட்டிலும் முஸ்லிம் மக்கள் மீது பெரிய அளவில் நலன் உள்ளவர்கள் யாருமில்லை''.

இவ்வாறு பொக்ரியால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்