மாறுபட்டு இருக்கிறதா 17-வது மக்களவை; தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு எப்படி?

By நெல்லை ஜெனா

பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் கடந்த பத்து ஆண்டுகளாக, அகில இந்திய அளவில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன், தமிழக அளவிலும், அகில இந்திய அளவிலும் எம்.பி.க்களின் பணி பற்றி ஆய்வு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்து 17-வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு முதல் நாள் முதல், நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடர் வரை தமிழக எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்ற விவரத்தை பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷனும், ப்ரீசென்ஸ் மாத மின் இதழும் தொகுத்துள்ளது. பிஆர்எஸ் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அடிபடையில் இந்த தகவல்கள் தொகுத்து வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பிரைம் பாயிண்ட் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனத் தலைவர் சீனிவாசனை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் அளித்தபேட்டி:

பிரைம் பாயிண்ட் சீனிவாசன்

மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடு பற்றி?

17-வது மக்களவை தொடங்கி 6 மாத காலங்கள் தான் ஆகின்றன. இரண்டு கூட்டத்தொடர் மட்டுமே முடிவடைந்துள்ளது. எனவே இப்போதே மதிப்பிடுவது என்பது கடினம். பொதுவாகவே மக்களை எம்.பி.க்கள் புதியவர்களாக இருப்பார்கள். அவர்கள் நாடாளுமன்ற நடைமுறையை தெரிந்து கொள்ளவும், அதற்கு ஏற்ப செயல்படவும் சற்று காலமெடுக்கும்.

எனவே புதிய எம்.பி.க்களுக்கு வழிகாட்டவும், அவர்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் அந்தந்த கட்சிகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களை கொண்டு அவர்களுக்கு காட்டலாம். நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது. விவாதத்தில் பங்கேற்பது, கேள்விகள் கேட்பது, தொகுதி பிரச்சினைகளை எடுத்துரைப்பது, தனிநபர் மசோதாக்கள் கொண்டு வருவது என பல வகையிலும் எம்.பி.க்கள் பணியாற்ற முடியும். அவர்களுக்கு வழிகாட்டுதலும், பயிற்சியும் அவசியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பி.க்களை கவனித்து வருவதன் அடிப்படையில் நாங்களும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

மக்களவையில் எந்த மாநில எம்.பி.க்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்?

குறிப்பிட்ட மாநில எம்.பி.க்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் எனக் கூற முடியாது. இருந்தாலும் மக்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளை பொறுத்தவரையில் பொதுவாக மகாராஷ்டிரா மற்றும் கேரள எம்.பி.க்கள் வித்தியாசமான முறையில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் மக்களவைக்குள் வந்து விட்டால் கட்சி பாகுபாடுகளை கடந்து தங்கள் மாநிலத்தை முன்னிறுத்தி ஒன்றுபட்டு பணியாற்றகிறார்கள். மாநில அரசுடன் ஒருங்கிணைந்து தேவையானவற்றை பெறுகிறார்கள்.

தமிழக எம்.பி.க்களை பற்றி?

தமிழக எம்.பி.க்கள் பெரும்பாலும் புதியவர்களாக இருக்கிறார்கள். நான் ஏற்கெனவே கூறியதுபோல அவர்களுக்கு நாடாளுமன்ற நடைமுறையை புரிந்து கொள்ள சற்று காலம் தேவைப்பட்டிருக்கும். ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அப்போது அவர்கள் இன்னமும் வேகமாக செயல்பட வாய்ப்புகள் கிடைக்கும். பொதுவாக மொழி பிரச்சினை காரணமாக அவர்கள் மற்றவர்களுடன் கலந்து பேசுவதில் சிக்கல் உள்ளது. அதுமட்டுமின்றி தனித்து இயங்க வேண்டிய சூழலும் உள்ளது. மாநில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை சந்திக்கிறார்கள். எனினும் அனுபவம் வாய்ந்த எம்.பிக்களுடன் பழகி வேகமாக செயல்பட முடியும்.

புதிய எம்.பி.க்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன?

மக்களவையில் ஒரு கட்சிக்கு குறிப்பிட்ட நேரமே ஒதுக்கப்படுகிறது. எனவே அதற்குள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். ஒரு கட்சிக்கு 30 நிமிடம் ஒதுக்கப்பட்டால் அதில் 3 எம்.பி.க்கள் பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் ஒருவரே 25 நிமிடங்கள் பேசினால் மற்றவர்களின் வாய்ப்பு பறிபோகும். அதுபோலவே பேச வேண்டிய விஷயம் வெளிப்படாமல் வேறு விஷயங்கள் மட்டுமே பதிவாகும் சூழல் ஏற்படும். இதனை தவிர்க்க முன் தயாரிப்பு அவசியம்.
அதுபோலவே நிலைக்குழுக்களில் புதிய எம்.பிக்கள் அதிக கவனம் செலுத்தலாம். ஏனெனில் இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே எம்.பி,க்கள் இருப்பார்கள். தயக்கமின்றி பேசவும், முழுமையாக வாய்ப்புகளை பெறவும் முடியும்.

17-வது மக்களவையின் ஆறு மாத செயல்பாடுகள் பற்றி?

இந்த மக்களவையின் செயல் திறன் முதல் கூட்டத்தொடரில் 120 சதவீதத்துக்கு மேலாகவும், குளிர்காலக் கூட்டத்தொடரில் 111 சதவீதமாகவும் உள்ளது. இது வரவேற்கக் கூடியது. அதேசமயம் போதுமான அளவு விவாதங்கள் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. மசோதாக்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. மசோதாக்கள் நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படுவதன் மூலம் சட்டமாக உருவாகும்போது அது மெருகேறவும், சிறப்பாக அமையவும் வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்