சட்டவிரோதமாக‌ குடியேறியவர்களை தங்கவைக்க பெங்களூருவில் தடுப்பு முகாம் தயார்

By செய்திப்பிரிவு

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுத்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய போதிய ஆவணங்கள் இல்லாதவரை சட்டவிரோத குடியேறியாக அறிவித்து, தடுப்பு முகாமில் தங்கவைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, ‘‘தடுப்பு முகாமில் தங்க வைக்கும் திட்டம் எதுவும் இல்லை''என விளக்கம் அளித்தார்.

பெங்களூருவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள நெலமங்களா அருகேயுள்ள சுண்டிகுப்பா கிராமத்தில் மத்திய அரசின் உத்தரவின்பேரில் தடுப்பு முகாம் கட்டப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் 'ட' வடிவில் முதல்கட்டமாக 7 அறைகளும், கழிவறை, சமையலறையும் கட்ட‌ப்பட்டுள்ளன. இதில் 15 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

இந்த முகாமை சுற்றி 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, அதன் மேல் பகுதியில் முள்வேலி மின் கம்பிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதேபோல இந்த மையத்தின் இரு பக்கவாட்டு பகுதிகளிலும் கைதிகளைக் கண்காணிக்க உயரமான கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இதனை வருகிற ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று திறப்பதற்காக அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கர்நாடக சமூக நலத்துறை ஆணையர் ஆர்.எஸ்.பெட்டப்பய்யா கூறுகையில், ‘‘கர்நாடக சமூக நலத்துறையின் சார்பில் இந்த இடத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கடந்த ஜனவரியில் மத்திய அரசு, குற்றச்செயலில் ஈடுபடும் வெளிநாட்டினரை அடைக்கும் மையம் அமைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி கர்நாடக அரசு கடந்த செப்டம்பரில் மாணவர் விடுதியை சட்டவிரோத குடியேறிகளை தங்க வைக்கும் முகாமாக மாற்ற முடிவெடுத்தது.

இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை கடந்த 9-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், முகாமுக்கு தேவையான அனைத்து பணிகளும் வேகமாக முடிக்கப்பட்டுள்ளன. தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும், பணியாளர்கள் தங்குவதற்கான அறைகளும் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த முகாமில் பணியாற்றுவதற்கான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பணிகள் முடிந்துவிட்டன. பெங்களூரு மண்டல வெளிநாட்டு பதிவாளர் அலுவலகம் யாரை இங்கு அனுப்புகிறதோ, அவரை முகாமில் தங்கவைப்போம்''என்றார்.

இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த மையம் விரைவில் இயங்கும். அந்த மையத்துக்கு உரிய காவல் ஏற்பாட்டை செய்யுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஏராளமானோர் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். குறிப்பாக வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம். அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பது நிரூபிக்கப்பட்டால், இந்த முகாமில் தங்கவைப்போம்''என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE