உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா: மீரட்டில் தடுத்து நிறுத்தம்

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மீரட்டில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு உயிரிந்தவர்களின் உறவினர்களை சந்திப்பதற்காக சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அப்போது பெருமளவு வன்முறைச் சம்பவங்களும் நடந்தன. கலவரத்தை தடுக்க போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் சிலர் உயிரிழந்தனர். இந்தநிலையில் உயிரிந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று காரில் மீரட் சென்றனர். ஆனால் மீரட் நகரின் வெளியிலேயே அவர்கள் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE