குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட 31 பேர் உத்தரபிரதேசத்தில் கைது

உத்தரபிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 31 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் 150 பேரை அடையாளம் கண்டுவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதில் சனிக்கிழமை நிகழ்ந்த வன்முறையின் போது துப்பாக்கியால் சுட்டதில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் இறந்துவிட்டார். மட்டுமல்லாமல் காவல் துறையினர் பலர் காயமடைந்துள்ளனர். காவல் துறையினர் வாகனம் உட்பட ஆறு வாகனங்கள் தீ வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. இது குறித்து ராம்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் கூறியதாவது:

இந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையோடு தொடர்புடைய 31 பேரை இதுவரை கைது செய்துள்ளோம். அதுபோக பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 150 பேரை அடையாளம் கண்டுள்ளோம். மேலும், தற்போது மாவட்டத்தில் இயல்புநிலையே உள்ளது. ஞாயிற்றுக் கிழமையில் இருந்து எந்த அசம்பாவிதங்களும் நடந்ததாக பதிவாகவில்லை. இரண்டு நாட்கள் இணையச் சேவையை முடக்கிய பின்பு இயல்பான நிலையே உள்ளது.

இவ்வாறு காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.-பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE