சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணின் முதுகில் தோட்டா; மருத்துவர்கள் அதிர்ச்சி

ஹைதராபாத் நிஜாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி காரணமாக சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணின் முதுகில் தோட்டா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தோட்டா எவ்வாறு அவரது முதுகில் வந்தது என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணின் முதுகில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் அவரது முதுகெலும்புக்கு அருகே ஒரு தோட்டாவைக் கண்டுபிடித்தனர். பெண்ணின் முதுகில் ஏற்பட்ட காயம் ஓராண்டுக்கும் மேல் இருப்பதாகத் தெரிகிறது.

இப்பெண்ணுக்கு கடந்த ஓராண்டாக வலி ஏற்பட்டாலும், காயம் குறித்து அவர் யாரிடமும் சொல்லாமலேயே தவித்து வந்துள்ளார். ஆனால் தற்போது வலி பொறுக்க முடியாத நிலையில் அவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரது முதுகில் எந்தக் காயமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

முதுகுவலி பிரச்சினையால் அந்தப் பெண் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தோட்டாவை அகற்றிய பின்னர், மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பிய பின்னரே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள இப்பிரச்சினை சாதாரணமானதல்ல என்பதால் ஐபிசி மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE