எங்களுக்கு நாங்களே மதிப்பிட்டுப் புகழ்ந்து கொள்ள நாங்கள் பாஜக அல்ல: சு.வெங்கடேசன் சிறப்புப் பேட்டி

By ஆர்.ஷபிமுன்னா

எங்களுக்கு நாங்களே மதிப்பிட்டுப் புகழ்ந்து கொள்ள நாங்கள் பாஜக அல்ல. பாஜகவினரின் வெற்றுப் புகழுரைகளையும், ஆபத்தான மசோதாக்களையும் எதிர்த்து எங்கள் அளவுக்கு செயல்பட்ட மற்ற மாநில எம்.பி.க்களை ஒப்பிட்டுக் காட்டுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான சு.வெங்கடேசன் சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடவடிக்கைகள் பற்றி ‘இந்து தமிழ் திசை’ இணையத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

முதல் முறை எம்.பி.யான உங்களுக்கு மக்களவை நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு அதில் கலந்து கொள்வது எளிதாக உள்ளதா?

விதிகளின்படி மக்களவை நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளவும், அவையின் நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்க்கும் சிறிய பயிற்சி போதும். ஆனால் அவையில் ஆளுங்கட்சியினர் நடவடிக்கையை சகித்துக்கொள்வதற்க்குத்தான் பெரும் பயிற்சி தேவை.

கடந்த இரண்டு கூட்டத்தொடர்களின் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், விதி 377 மற்றும் விவாதங்களில் கலந்துகொண்டு பேச உங்களுக்கு போதுமான வாய்ப்புகள் கிடைத்ததா?

இவை அனைத்தும் குலுக்கல் சீட்டு முறையில் தான் தேர்வு செய்யப்படுகின்றன. ’எதற்கும் அதிர்ஷ்டம் வேண்டும் சார்’ என்று சொல்பவர்களின் குரலே இதில் ஓங்கி ஒலிக்கிறது. உதாரணமாக, இந்தக் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் பூஜ்ய நேரத்தில் பேச நான் மனு செய்தேன். ஆனால் ஒரு முறைகூட என் பெயர் குலுக்கல் சீட்டில் வரவில்லை.

ஆனால், அண்ணன் வசந்த குமாரின் பெயர் எட்டு முறைக்கு மேல் வந்திருக்கிறது. அந்த ரகசியத்தினை எனக்கும் சொல்லிக்கொடுங்கள் என்று அவரிடம் கேட்டால் மீனாட்சியைவிட குமரி அன்னைக்கு சக்தி அதிகம் எனப் பதில் தந்தார்.

மசோதாவின் விவாதங்களில், கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் எங்களைப் போல எண்ணிக்கை குறைவான கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையின் முக்கியமான நிகழ்வாக நீங்கள் கருதுவது?

மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது மிக முக்கிய நிகழ்வு. முதல் கூட்டத்தொடரின் முப்பதுக்கும் மேற்பட்ட நாட்களில் எண்ணற்ற முறை மக்களின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் போராடினோம். ஆனால் ஒரு முறைகூட, அவை ஒத்திவைக்கப்படவில்லை.

மாற்றுக்கருத்துக்கும், எதிர்க்கருத்துக்கும் கொடுக்கப்படும் இடம் தான் ஜனநாயகத்தின் செழிப்புமிக்க பகுதி. அவற்றுக்கு துளியும் இடம் அளிக்காமல் நசுக்க நினைப்பது ஆபத்தின் அடையாளம். இந்த முறை எதிர்க்கட்சிகளால் மக்களவையை மூன்று முறை ஒத்திவைத்ததின் மூலம் இந்த ஆபத்தினை உடைக்க முடிந்தது.

இக்கூட்டத்தொடரில் நீங்கள் ஆச்சரியத்தோடு பார்த்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

'ரேப் இன் இந்தியா' என்று சொன்னதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று. பாஜக உறுப்பினர்கள் கடைசி நாள் அவையை நடத்தவிடாமல் போராட்டத்தை நடத்தினர். வழக்கமாக எதிர்க்கட்சிகள் அவையில் முழக்கம் எழுப்பினால் சட்டவிதிகள் நூலைக் கையில் எடுத்து உடனடியாக உத்தரவு பிறப்பிப்பார் சபாநாயகர்.

ஆனால், அன்று ஆளுங்கட்சி போராடிய போது சுமார் 20 நிமிடத்துக்கு மேலாக அந்நூலில் தன் தலையைத் தாழ்த்தி பக்கங்களைப் புரட்டிக்கொண்டே இருந்தார். அப்படி அவர் எந்த விதியைத் தேடினார் என்பதை அறிய ஆச்சரியத்தோடு காத்திருந்தேன்.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் மக்களவை விவாதங்கள் பற்றி?

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அரசு கொண்டுவந்ததும், அவ்விவாதத்தினை, அமைச்சரும், ஆளும் கட்சியினரும் எப்படி கையாண்டார்கள் என்பதும் பலராலும் கவனிக்கப்பட்டது. இதில், சக மனிதனின் மீதான வெறுப்பு, இரக்கமே இல்லாத வார்த்தைகளால் எவ்வளவு கொடூரமாக முன்னெடுக்கப்பட்டது என்பதைப் பார்க்க முடிந்தது.

மகாத்மாவின் 150-வது ஆண்டினைக் கொண்டாடும் இந்த காலத்தில் தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் தீவிர அரசியல் செயல்பாட்டுக்குக் காரணமான கொடிய சட்டத்தை அப்படியே தேதி மாற்றி இங்கு கொண்டுவந்துள்ளனர். ஆசியர்களின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத்தான் காந்தி மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் பணியாற்றினார்.

அவர் தொட்ட இடத்திலிருந்து நாமும் பணியைத் தொடங்க வேண்டியுள்ளது. அவர்கள் கோட்சேவை தேசபக்தனாகக் கொண்டாடட்டும், நாம் காந்தியை போராட்டக்களத்தின் தோழனாகவும் தலைவனாகவும் நினைவு கொள்வோம்.

“இந்தக் கொடிய சட்டம் நிறைவேறினால் இந்தியா தனது மனிதாபிமானமிக்க கோட்பாட்டை அதிகாரபூர்வமாக கைவிடும் கொடியநாளாக இது இருக்கும்” என்று விவாதத்தின் போது நான் கூறினேன். இந்தக் கொடிய சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் தேச பக்தர்கள் களமிறங்கியுள்ளனர். எல்லா காலத்திலும் மக்களே வரலாற்றை முன் நகர்த்துகின்றனர்.

மக்களவை நடவடிக்கைகளில் உங்களை மிகவும் கவலைகொள்ளச்செய்த நிகழ்வு?

இத்தனை கோடி மக்களின் வாழ்வோடும் எதிர்காலத்தோடும் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மக்களவையில் எவ்வளவு அலட்சியத்தோடு கையாளப்படுகிறது என்பது தான்.

மக்கள் பிரச்சனைகளை மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் எழுப்புவதற்கும் நீங்கள் காணும் வேறுபாடு என்ன?
வெளியில் இருந்து எழுப்பப்படும் போது இவ்வளவு மோசமாக பதில் சொல்ல அமைச்சர் இருக்க மாட்டார். எனவே ஏதோ ஒருவகையில் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை பொய்க்காமல் இருக்கும்.

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசிய நீங்கள் பிறகு முற்றிலும் தமிழில் மட்டும் பேசிவதன் காரணம் மொழி அரசியல் எனக் கொள்ளலாமா?

நிச்சயமாக. சபாநாயகர் இதுவரை ஒற்றைச் சொல்கூட இந்தி அல்லாத சொல்லை நாடாளுமன்றத்தில் உச்சரிக்கவில்லை. முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே அவையை நடத்துகிறார். 90 சதவிகிதம் அமைச்சர்கள் இந்தியில் மட்டுமே பேசுகின்றனர். யாராவது ஆங்கிலத்தில் பேசினால் இந்தியில் பேசுமாறு ஆளுங்கட்சியினர் கூச்சல் போடுகின்றனர். நிலைக்குழுக்கள் முழுக்க முழுக்க இந்தியில் நடத்தப்படுகின்றன. இந்தி சரளமாக தெரியாத அதிகாரிகள் விழிபிதுங்குகின்றனர்.

நிதி மசோதாவில் சிபிஐயின் எம்.பி.யான தோழர் கே.சுப்புராயன் தமிழில் பேசிய போது நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அந்த கருத்துக்கு தமிழிலே பதில் சொன்னார். அவ்வளவு நேரம் தன் காதில் கேட்புக் கருவியை (ஹெட்போன்) வைத்திருந்த ஒரு மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் சொன்னதும் அதை சட்டென எடுத்து கீழே போடுகிறார்.

இது, இந்தி மேலாதிக்கம் நூறு சதம் நிலைநிறுத்தப்படும் இடமாக நாடாளுமன்றம் மாற்றப்படுவதைக் காட்டுகிறது. அதனை எதிர்த்து முழு வலிமையோடு போராட வேண்டியுள்ளது. அதை வலிமையுடன் எதிர்க்க தாய்மொழி மட்டுமேதான் சிறந்த கருவி.

கூட்டத்தொடருக்கானதைத் தவிர்த்து நீங்கள் டெல்லியில் இருந்த மற்ற நேரங்களை எப்படி பயன்படுத்தினீர்கள்?

தொடர் நடக்காத பொழுது நான் தொகுதிப் பணிக்காக மதுரை திரும்பிவிட்டேன். ஒரு நாள் கூட டெல்லியை சுற்றிப் பார்க்கவில்லை. இப்பொழுது என்னைப் பொறுத்தவரை டெல்லி செல்வது என்றால் விமான நிலையம், அங்கு நான் தங்கிய தமிழக அரசின் வைகை இல்லம். செயல்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் மத்திய அமைச்சகங்கள் மட்டுந்தான்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளன் எனும் அனுபவம் உங்களுக்கு மக்களவையில் எந்த வகையில் பலன் தருகிறது?

எழுத்தாளனின் அனுபவம் எம்.பி.யான பின் மக்களவையில் பயன்படுமா? என்று தெரியவில்லை. ஆனால் மக்களவை உறுப்பினர் என்ற அனுபவம் எழுத்தாளனுக்கு எதிர்காலத்தில் பயன்படலாம்.

நாடாளுமன்ற நூலகத்துக்குப் போனீர்களா?

போனேன். இரண்டு நாட்கள் சுமார் நான்கு மணிநேரம் வரை செலவிட்டிருப்பேன். பத்துக்கும் குறைவானவர்களே
நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று நினைக்கிறேன். தமிழ் நூல்கள் பிரிவையும், சட்ட வரலாற்றுப் பிரிவினையும் பார்த்தேன். தமிழ் நூல்களைப் பொறுத்தவரை 1950 முதல் 1980 வரை தமிழில் வெளியான முக்கிய நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அதற்குப் பின் அதன் தரம் வெகுவாக குறைந்து, தமிழகத்தின் பொது நூலகங்களில் செய்வதைப் போல் மாறி வருகிறது.

தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற கூட்டணி மக்களவையிலும் தொடர்வதாகக் கருதுகிறீர்களா?

நிச்சயமாகத் தொடர்கிறது. மக்களவையில் பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியா முழுக்க எதிரொலிக்கும் தனித்தக்குரலாக தமிழகத்தின் குரல் இருப்பதற்கு அது தான் காரணம்.

மக்களவையின் இரு கூட்டத்தொடரிலும் தமிழக உறுப்பினர்களின் நடவடிக்கைகள் திருப்தியாக இருந்ததா? தங்கள் கருத்து?

எங்களுக்கு நாங்களே மதிப்பிட்டுப் புகழ்ந்து கொள்ள நாங்கள் பாஜக அல்ல. பாஜகவினரின் வெற்றுப் புகழுரைகளையும், ஆபத்தான மசோதாக்களையும் எதிர்த்து எங்கள் அளவுக்கு செயல்பட்ட மற்ற மாநில எம்.பி.க்களை ஒப்பிட்டுக் காட்டுங்கள். பிறகு விவாதிப்போம்.



வழக்கமாக எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. ஆனால், இந்த மக்களவையின் சபாநாயகர் அனைவருக்கும் பேச வாய்ப்பளித்திருக்கிறார் என்பது உண்மையா?

அவர் பாஜக என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இதற்கு மேல் கூடுதல் விளக்கம் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இதனைச் செய்ய முடியவில்லையே என்று இந்தக்கூட்டத்தொடரில் நீங்கள் வருத்தப்பட்ட விசயம் உண்டா?

உண்டு. இடதுசாரிகள் வலிமையோடு இருந்திருந்தால் காஷ்மீரில் கைதாகி உள்ள தேசிய காங்கிரஸ் எம்.பி.யான பரூக் அப்துல்லாவை விடுதலை செய்து அவைக்குக் கொண்டு வரும் வரை கூட்டத்தொடரினை நடத்தவிட்டிருக்க மாட்டோம்.

குளிர்காலக் கூட்டத்தொடரின் மக்களவையில் 116, மாநிலங்களவையில் 99 சதவிகிதம் ஆக்கபூர்வமாக இருந்ததாக ஆளும் மத்திய அரசினர் பெருமிதம் கொள்கிறார்களே?

நாடாளுமன்றத்தின் 144 தூண்களில் எத்தனை தூண்களை முழுமையாக இடித்திருக்கிறார்கள், எத்தனைத் தூண்களை பாதியாக விட்டு வைத்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் சேர்த்து சொல்லச்சொல்லுங்கள். நாடு அறிந்துகொள்ளட்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்