கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்: காவல்துறையிடம் புகார்

By செய்திப்பிரிவு

கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் கவுதம் கம்பீர், டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது தவறு தான். ஆனால், அசம்பாவிதங்கள் நடக்கும்போது காவலர்களுக்கு வேறு வழியில்லை. தங்களை தற்காத்துக் கொள்ள இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது’’ எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து பேசிய நபர் கவுதம் கம்பீருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து கவுதம் கம்பீர் காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE