பெங்களூருவில் தேசிய கீதம் பாடி கும்பலை கலைத்த அதிகாரி

By செய்திப்பிரிவு

பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சமாதானம் செய்யும் வகையில் போலீஸ் அதிகாரி ஒருவர் தேசிய கீதம் பாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு டவுன் ஹால் எதிரே நேற்று முன்தினம் 144 தடை உத்தரவை மீறி இஸ்லாமிய அமைப்பினரும், மாணவர்களும் போராட்டம் நடத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பெங்களூரு மத்திய மண்டல துணை ஆணையர் சேத்தன் சிங் ரத்தோர் ஒலிப்பெருக்கியில் பேசினார்.

இந்திய ஒருமைப்பாடு குறித்தும், ஒற்றுமையின் அவசியம் குறித்தும் சில வார்த்தைகள் பேசிய அவர், “நீங்கள் என்னை மதித்தால், நான் பாடும் பாடலை என்னோடு சேர்ந்து பாடுங்கள். அந்தப்பாடலை உங்களால் பாட முடிந்தால் இந்தியரை யாராலும் அந்நியப்படுத்த முடியாது” என்று கூறி, “ஜன கன மன” என தேசிய கீதத்தை பாடினார். இதைக்கேட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் எழுந்து நின்று, தேசிய கீதத்தை பாடினர். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

ரத்தோருக்கு பாராட்டு

இந்த நிகழ்வின் வீடியோ ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. நெருக்கடியான நேரத்தில் சாதுரியமாக செயல்பட்ட சேத்தன் சிங் ரத்தோருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE