ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை

ஜெய்ப்பூரில் கடந்த 2008-ல் 70-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கடந்த 2008-ம் ஆண்டு, மே 13-ம் தேதி மாலை, 2 கி.மீ. சுற்றளவில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. ஜெய்ப்பூரை உலுக்கிய இந்த சம்பவத்தில் 71 பேர் உயிரிழந்தனர். மேலும் 185 பேர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் முகம்மது சைப், முகம்மது சர்வார் ஆஸ்மி, முகம்மது சல்மான், சைபுர் ரஹ்மான் ஆகிய 4 பேர் குற்றவாளிகள் என ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.

சந்தேகத்தின் பலன் அடிப்படையில் ஷாபாஸ் ஹுசைன் என்பவரை விடுதலை செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் நால்வருக்குமான தண்டனையை மாஜிஸ்திரேட் அஜய்குமார் சர்மா நேற்று அறிவித்தார்.

இது குறித்து அரசு வழக்கறிஞர் சந்த் கூறும்போது, “வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்ததற்காக குற்றவாளிகள் நால்வருக்கும் இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 302-ன் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஷாபாஸ் ஹுசைன், லக்னோவை சேர்ந்தவர் ஆவார். இந்தியன் முஜாகிதீன் சார்பில் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இவர் போலீஸாருக்கு இமெயில் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஆனால் இது நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த 5 பேர் தவிர 2 குற்றவாளிகள் டெல்லியில் அதே ஆண்டில் நிகழ்ந்த பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் இன்னும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.- பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE