‘‘முதல்முறை’’ - பாகிஸ்தானில் இருந்து வந்த 7 இந்துக்களுக்கு குடியுரிமை: குஜராத்தில் மத்திய அமைச்சர் வழங்கினார்

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசிக்கும் இந்துக்கள் 7 பேருக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்த பிறகு குஜராத் மாநிலத்தில் முதன்முறையாக பாகிஸ்தானில் இருந்து வந்த 7 இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையாட்டியுள்ள கட்ச் மாவட்டத்தில் ஏராளமான அகதிகள் தங்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் நடந்த மதமோதல்கள் காரணமாக அவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு வந்து அகதிகளாக தங்கியுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாகிஸ்தானில் இருந்து வந்து அகதிகளாக தங்கி இருக்கும் 7 இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ் வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE