'இன்னொரு கோத்ரா சம்பவம்'- கர்நாடக அமைச்சரின் கருத்தால் சர்ச்சை

பெரும்பான்மை மக்களின் பொறுமையை சோதித்தால் இன்னொரு கோத்ரா சம்பவம் நடக்கலாம் என கர்நாடக அமைச்சர் எச்சரித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சிடி.ரவியின் கருத்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மங்களூருவில் நடந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரவி, ”காங்கிரஸ் எம்.எல்.ஏ., யு.டி.காதர் கோத்ராவில் நடந்ததை நினைவுகூர்வது நல்லது. சிறுபான்மையின மக்கள் தங்களின் மனோபாவத்தால்தான் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைத்தனர். கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை காதர் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை நினைவில் இல்லாவிட்டால் நினைவுக்குக் கொண்டுவர முயற்சிக்கவும்." என்று பேசியுள்ளார்.

அவர் இவ்வாறு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ யு.டி.காதர், குடியுரிமை திருத்தச் சட்டம் கர்நாடகாவில் அமலுக்குவந்தால் கர்நாடகம் பற்றி எரியும் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (டிச.19) ஊரடங்கு உத்தரவையும் மீறி பெங்களூர், மங்களூருவில் போராட்டங்கள் நடைபெற்றன. மங்களூருவில் போலீஸாருடன் போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. மங்களூருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், பெரும்பான்மை மக்களின் பொறுமையை சோதித்தால் இன்னொரு கோத்ரா சம்பவம் நடக்கலாம் என கர்நாடக அமைச்சர் எச்சரித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE