‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்துக்கான ரேஷன் அட்டை மாதிரி வடிவமைப்பை உருவாக்கியது மத்திய அரசு

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்துக்கான ரேஷன் அட்டை மாதிரி வடிவமைப்பை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

நாடு முழுவதும் ‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தகுதி உள்ள பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக, வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்வோர், தங்களுடைய சொந்த ஊரில்வழங்கப்பட்ட ரேஷன் அட்டையைப் பயன்படுத்தி உணவுப்பொருட்களை பெற முடியும். இந்த திட்டம் சோதனை முயற்சியாக 6 மாநிலங்களில் ஏற்கெனவே அமலுக்கு வந்துள்ளது. இதை அடுத்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் நாட்டில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் வழங்கும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, ரேஷன் அட்டைக்கான மாதிரியை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.

இந்த ரேஷன் அட்டை வடிவமைப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய ரேஷன் அட்டை வழங்கும்போது, இந்த புதிய வடிவமைப்பை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

புதிய ரேஷன் அட்டையில் இடம்பெறும் தகவல்கள் உள்ளூர் மொழியுடன் இந்தி அல்லது ஆங்கிலம் என 2 மொழிகளில் இடம்பெற வேண்டும். 10 இலக்க எண் வழங்க வேண்டும். இதில் முதல் 2 இலக்கம் மாநிலத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE