சிறுபான்மையின மக்களின் சொர்க்கம் இந்தியா: முக்தார் அப்பாஸ் நாக்வி

"சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா சொர்க்கமாக இருக்கிறது பாகிஸ்தான் நரகம் போல இருக்கிறது" என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி கூறியுள்ளார்.

சர்வதேச சிறுபான்மையின மக்களுக்கான உரிமைகள் தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் வெறுப்பு சூழலை உருவாக்க சில நச்சு மனம் கொண்டவர்கள் முற்பட்டு வருகின்றனர். சமூக ரீதியாக மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்க சிலர் அபாயகரமான சிந்தனையுடன் முயற்சிக்கின்றனர்.

இன்னும் சிலர் இனி முஸ்லிம்கள் இங்கு வாழ முடியாது என்ற அச்சத்தை விதைக்கின்றனர். ஆனால் இவற்றில் எதிலும் துளியும் உண்மையில்லை. வேண்டுமென்றே சமூகத்தில் விஷத்தைப் பரப்புகின்றனர்.

ஆண்டாண்டு காலமாக இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

காங்கிரஸ் கட்சியினர் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை, வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எனது முஸ்லிம் சகோதரர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் நவாப் மாலிக், ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய ஜெனரல் டயருடன் அமித் ஷாவை ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதனை சரத் பவார் கட்சித் தலைவர் என்ற முறையில் கண்டிக்க வேண்டும். மாலிக் எல்லை தாண்டி பேசுகிறார். ஜெனரல் டயர் உத்தரவால் 100 கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் யாருக்கும் எந்த பங்கமும் செய்யவில்லை.

உண்மையில் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா சொர்க்கம் போன்றது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நரகத்தை அனுபவிக்கின்றனர். அங்கே கட்டாய மதமாற்றம் போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் அனுபவித்துவருகின்றனர்" என்றார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்நிலையில்தான் முக்தார் அப்பாஸ் நாக்வி, சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்கம் போல் உள்ளதாகக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE