குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை: டெல்லி ஜூம்மா மசூதி இமாம் கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும்இல்லை என்றும் போராட்டங்களின்போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் டெல்லி ஜூம்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இமாம் சையது அகமது புகாரி கூறியிருப்பதாவது:

போராட்டம் நடத்துவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை. இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், போராட்டங்களின் போது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். நமது உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் வித்தியாசம் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டமாகி உள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் சட்டமாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது. இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இவ்வாறு சையது அகமது புகாரி கூறியுள்ளார். டெல்லியில் மாணவர்களும், முஸ்லிம்களும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் டெல்லி ஜூம்மா மசூதி இமாம் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE