டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை விசாரிக்க தனிக்குழு அமைக்க முடியாது; உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம்: உச்ச நீதிமன்றம் கைவிரிப்பு

By பிடிஐ

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், அலிகர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மாணவர்கள் மீதான தாக்குதலை விசாரிக்க தனியாக விசாரணைக் குழு அமைக்க முடியாது. அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள், காங்கிரஸ் மாணவர் தேசியக் கூட்டமைப்பு கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 3 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதில் மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறித் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்தேறின. இது தொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவின. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, உ.பி.யில் உள்ள அலிகர் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியும், மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறி நடத்திய தாக்குதல்கள் நடத்தியது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கோலின் கோன்சால்வேஸ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறுகையில், "மாணவர்கள் முறையற்ற வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், "அலிகர் பல்கலைக்கழகத்தில் இரு மாணவர்கள் மட்டுமே காயமடைந்தார்கள். அவர்களுக்குப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் போலீஸாரால் காயம் அடையவில்லை" எனத் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்ய காந்த் அமர்வு கூறுகையில், "வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது என்றாலும், அதைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாகக் குழுக்களை அமைத்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு மனுதாரர்கள் எங்கெங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதோ அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறலாம்.

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விசாரணைக்கு உத்தரவிடுவார்கள், தேவைப்பட்டால் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைப்பார்கள்.

போலீஸார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியபோதும், நடவடிக்கை எடுத்தபோதும் பல்கலைக்கழகமும், துணைவேந்தரும் கவலைப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள். உயர் நீதிமன்றம் அனைத்துவிதமான அம்சங்களையும் கருத்தில் கொண்டு இருதரப்பையும் விசாரிக்கும். தேவைப்பட்டால் உண்மை அறியும் குழுவை அமைத்து விசாரிக்கும்.

அதேசமயம், உச்ச நீதிமன்றம் எந்தவிதமான ஓய்வு பெற்ற நீதிபதியையும் விசாரணைக் குழுவுக்கு நியமிக்க முடியாது. உங்கள் மனுவைப் பரிசீலிக்க இயலாது" எனத் தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்