எஸ்சி.எஸ்டி பிரிவினருக்கான சட்டமன்ற, நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டை 2030 வரை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதன் விவாதத்தில் கலந்துகொண்டு திமுக மக்களவை குழு துணைத் தலைவர கனிமொழி எம்பி உரையாற்றினார்.
தூத்துக்குடி எம்.பியான கனிமொழி தனது உரையில் பேசியதாவது:
இந்த சட்டத் திருத்த மசோதாவை முழுமையாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த அரசு கொண்டு வரும் மசோதாக்களில் துரதிஷ்டவசமாக இந்த மசோதா மட்டுமே ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது.
இந்த மசோதாவின் மீது சில சந்தேகங்களும் உள்ளன. ஆங்கிலோ இந்தியன் சமூகத்துக்கான இட ஒதுக்கீடு இந்த மசோதாவில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது உரையின் போது தெரிவித்தார்.
ஆங்கிலோ இந்தியன் சமூகம் இந்த நாட்டுக்காக பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50,000 ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினர் வாழ்கிறார்கள்.
நாடு முழுவதும் அவர்கள் சுமார் மூன்று லட்சம் எண்ணிக்கைக்கு மேல் இருக்கக் கூடும். இன்னும் சொல்லப்போனால் 13 மாநிலங்களில் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள்.
தென்னிந்தியா மாநிலங்களில் 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளனர். இந்தியா முழுவதும் அவர்கள் சிதறி இருப்பதால் அவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன்ஸ் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிப்பது பற்றி ஏன் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை? இந்த மசோதாவைப் பற்றி மாநில அரசுகளிடம் ஏதாவது விவாதித்தீர்களா?
மாநிலங்களின் உரிமைகளை பறித்து கூட்டாட்சியில் தலையிடுவது மத்திய அரசுக்கு வேலையாக போய்விட்டது. ஒவ்வொரு மசோதாவிலும் இதுவே நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரே காரணத்தாலேயே சிறுபான்மையின மக்களை தொடர்ந்து துன்புறுத்த வேண்டும் என அர்த்தம் கிடையாது.
நேற்று குடியுரிமை மசோதா முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது. இன்று கொண்டுவரும் இந்த மசோதா கிறிஸ்தவர்களுக்கு எதிராக இருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கியதுதான் ஜனநாயகம் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். எஸ்சி எஸ்டி யினருக்கான இட ஒதுக்கீடு நீட்டிக்கப் படுவதை முழுமனதோடு வரவேற்கிறோம்.
70 ஆண்டுகளாக இட ஒதுக்கீடுகள் உள்ள தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இன்னமும் பல தீண்டாமைச் சுவர்கள் இருக்கின்றன. சுடுகாட்டை கூட தலித் மக்களோடு பகிர்ந்து கொள்ள தடை இருக்கிறது.
தலித் மக்களின் சாம்பல் கூட தங்கள் சாம்பலுடன் கலந்து விடக்கூடாது என்ற தீண்டாமை இருக்கிறது. தலித்துகளுடன் தண்ணீரை பங்கு போட்டுக்கொள்ள தடை இருக்கிறது.
குளங்களில், கிணறுகளில் தலித்துகள் இறங்க முடியாத நிலை இன்னும் இருக்கிறது. தலித்துகள் மற்றவர்களோடு சேர்ந்து வாழ முடியாத நிலைமை இன்னமும் இருக்கிறது.
தலித்துகள் தெருவில் நடக்க முடியாத நிலைமை கூட இன்னமும் இருப்பதற்காக நாம் வெட்கப்பட வேண்டும்.இன்னமும் எத்தனை எத்தனை தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் 15% எஸ்சி உறுப்பினர்களும் 8.6 சதவீதம் எஸ்டி உறுப்பினர்களும் இருப்பதாக இங்கு பேசிய சிலர் பெருமை பட்டார்கள். இந்த இட ஒதுக்கீடு அளவு 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியானது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இது அதிகமாக இருக்க வேண்டும்.மத்திய அரசுப் பணிகளில் 90% பேர் பணியாற்றும் 10 முக்கியமான துறைகளில் எஸ்சியினருக்கான 8223 பணியிடங்கள் இன்னும் காலியாகவே இருக்கின்றன. அதேபோல எஸ் டி யினருக்கான 6925 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மத்திய அரசு இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் இருக்க விரும்பும் காரணம் என்ன?
ஐஐஎம் கணக்கெடுப்பு
நாட்டிலுள்ள 13 ஐஐஎம் உயர்கல்வி நிறுவனங்களில் பெங்களூரு ஐஐஎம் எடுத்த கணக்கெடுப்பின்படி மொத்தமுள்ள 642 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி பிரிவினர் 4 பேர்தான், எஸ்டி பிரிவில் ஒரே ஒருவர் மட்டும்தான்.
சென்னை ஐஐடியிலும் இதே நிலைதான். கடந்த பத்து ஆண்டுகளில் 3 ஆயிரத்து 848 முனைவர் இருக்கைக்கான சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருடையது 234 மட்டும்தான். இதுதான் அறிவுத் தீண்டாமையா?
எனவே இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதன் மூலம் மட்டுமல்ல, பல்வேறு வகைகளிலும் எஸ்சி,எஸ்டிச் சமுதாயத்தினரை முன்னேற்ற மத்திய அரசு முன் வரவேண்டும். எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நான் அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago