‘கைலாசா' தனி நாடு; நித்யானந்தா தீவு எதையும் வாங்கவில்லை: ஈகுவடார் மறுப்பு- ஹைதிக்கு தப்பி ஓட்டம்?

By செய்திப்பிரிவு

நித்யானந்தாவிற்கு அடைக்கலம் ஏதும் வழங்கவில்லை எனவும் அவருக்கு தீவையும் விற்கவில்லை எனவும் ஈகுவடார் நாடு விளக்கம் அளித்துள்ளது.

கடத்தல் புகாரின் கீழ் அகமதாபாத் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்குள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போலீஸார் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நித்யானந்தா மீது கடத்தல் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் பெண் பக்தர்கள் சிலர், அவர் மீது பாலியல் புகாரும் அளித்தனர். எனவே, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீஸார் நித்யானந்தாவை தேடி வந்தனர். இதனிடையே, தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் நித்யானந்தா தலைமறைவாக உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் அவரை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, நித்யானந்தாவால் உருவாக்கப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கும் வலைதளத்தில் பல அறிவிப்புகள் வெளியாகின.

அதில், ஈகுவடாரில் உள்ள ஒரு தீவானது ‘ரிபப்ளிக் ஆப் கைலாசா' என்ற இந்து நாடாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகள் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும் கைலாசாவுக்கென தனிக் கொடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் நித்யானந்தாவும், மறுபக்கத்தில் ரிஷப வாகனமும் கொண்டதாக அந்தக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, அந்நாட்டின் தேசிய விலங்காக நந்தியும், தேசிய பறவையாக ஷரபமும் (சங்ககாலத்தில் இருந்ததாக அறியப்படும் ஒருவகை பறவை), தேசிய மலராக தாமரையும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த வலைபக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகியவை அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கைலாசா நாட்டுக்கு செல்ல தனி பாஸ்போர்ட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு அமைச்சரவையை அமைக்கும் பணிகளும், 10-க்கும் மேற்பட்ட துறைகளை உருவாக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஈகுவடாரில் நித்யானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை ஈகுவடார் நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில் ‘‘நித்யானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்படவில்லை. அதுபோலவே, நித்யானந்தாவுக்கு ஈகுவடார் அருகே தீவு எதையும் விற்கவில்லை. இதுதொடர்பாக அவர் சார்பாக இணையதளங்களில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் தவறானவை. அதில் உண்மையில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நித்யானந்தா அகதியாக தன்னை ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி ஈகுவடார் நாட்டுக்கு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதனை ஏற்க ஈகுவடார் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் ஈகுவடாரில் இருந்து ஹைதி நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்