உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அமர்வு முன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தலைத் தள்ளிவைக்க உத்தரவிடுவோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இறுதியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாமா? எனக் கேட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தரப்பு வாதத்தில், ''மறுவரையறை செய்யாமல் தேர்தலை அறிவித்துள்ளனர், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில். அனைத்து சட்டபூர்வமான பணிகளை முடித்தே தேர்தலை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது மாநிலத் தேர்தல் ஆணையம் அப்படி நடக்கவில்லை.
விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக 9 மாவட்டங்கள் ஆகியுள்ளன. அங்கு தொகுதி மறுவரையறை செய்யவில்லை. இது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஏற்கெனவே இங்கு ஒரு மனு மறுவரையறை செய்ய கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளதே?” எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழகத் தேர்தல் ஆணையம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “தொகுதி மறுவரையறை, தனித்தொகுதி ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு என்ற அனைத்துப் பணிகளும் 2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிந்து விட்டது. ஏற்கெனவே தொகுதி மறு வரையறை முடிந்துவிட்டது. புதிதாகப் பிரித்த மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த தமிழகத் தேர்தல் ஆணையம், “புதிதாகப் பிரித்த மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை” எனத் தெரிவித்தது.
புதிய மாவட்டங்களுக்கு ஏன் தொகுதி மறுவரையறை தேவையில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழகத் தேர்தல் ஆணையம், “ஏற்கெனவே சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுள்ளது, ஏற்கெனவே பழைய மாவட்டங்களில். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டுவிட்டதால், அது புதிதாக பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
மேலும், மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யப்படுவதால், புதிய மாவட்டங்களாகப் பிரித்தாலும் பாதிக்காது. மேலும் வரும் காலத்தில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போது புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறைப் பணிகள் மீண்டும் செய்யப்படும்” எனத் தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “எதற்காக தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. குழப்பமில்லாமல், சரியான இட ஒதுக்கீடு முறைகளைப் பின்பற்றதானே? புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் அதைச் செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா?” எனக் கேட்டனர்.
அப்போது திமுக தரப்பு அபிஷேக் சிங்வி குறுக்கிட்டு, “ ஆம், இதற்காகத்தான் இந்தக் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தோம், உள்ளாட்சி அமைப்புகளில் பல பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் முக்கியம் காரணம். அதில் பல ஒதுக்கீடுகள் உள்ளன. SC, ST, பெண்கள் என பல உள்ளன. எனவே புதிய மாவட்டமாகப் பிரிக்கும்போது இதில் பல விஷயங்கள் கணக்கில் வராமல் போகும்.
பல ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தொகுதி மறுவரையறைப் பணிகளை தற்போது செய்து முடித்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. புதிதாக மறுவரையறை செய்துவிட்டோம் என தேர்தல் ஆணையம் கூறுவது தவறு. தேர்தல் ஆணையம் சொல்வது உண்மைக்கு மாறான தகவல்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும், நல்ல அரசு அமையவேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமும் கூட. ஆனால் அது நியாயமாக, சட்டபூர்வ பணிகள் முடிக்கப்பட்டு நேர்மையான முறையில் நடக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சட்டபூர்வமாக, நல்ல முறையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேணடும் என்பதுதான் ஜனநாயகம்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீதிமன்றத்தில் நடக்கும் வாதம் உட்பட, எதுவும் ஜனநாயகத்தைப் பாதித்து விடாது. பாதிக்க விடமாட்டோம்’. என்று தெரிவித்தனர்.
ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தில், ''டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் 31 மாவட்டங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி குறுக்கிட்டு, “லேட்டஸ்ட் சென்சஸ் என்பது 2011-ல் எடுக்கப்பட்டது, அதற்கு முன்னர் 2001-ல் எடுத்தனர். மேலும் அடுத்த சென்சஸ் என்பது 2020-ல் தான் வெளியிடுவர். எனவே, தற்போதைய நிலையில் லேட்டஸ்ட் சென்சஸ் அடிப்படையில் மறுவரையறை நடத்தப்பட்டுவிட்டது. மேலும் ஏற்கெனவே உள்ள உத்தரவில் சீக்கிரம் தேர்தலை நடத்த உத்தரவிடுங்கள் எனக் கூறப்பட்டது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படி இல்லையே, அவர் உத்தரவில். அனைத்து சட்டபூர்வ நடவடிக்கையை முடிக்கக் கூறியுள்ளாரே. மேலும் எதற்காக இப்போது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன ? அப்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பழைய நிலையே தொடரும் என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது ?” எனக் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி அளித்த பதிலில், “புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும்.உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆனால் சட்டபூர்வமான நடவடிக்கை முடிக்க வேண்டுமே?, மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், புதிதாகத்தானே அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். சட்ட நடைமுறை, மறுவரையறை முடித்த பின்னரா தேர்தல் அறிவித்தீர்கள்?” எனக் கேள்வி கேட்டனர்.
தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “அனைத்தும் முடித்தே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் தொகுதி மறுவரையறை செய்ய உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் உத்தரவில் கூறவில்லை” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படியெனில் சட்டபூர்வ நடவடிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்ன ? மேலும் புதிய மாவட்டம் பிரிக்கும்போது அனைத்து எல்லையும் மாறும், அப்படி இருக்கையில் ஏற்கெனவே தொகுதி மறுவரையறை செய்து விட்டோம் என்று எப்படிக் கூற முடியும்? தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளி போட முடியும்” எனத் தெரிவித்தனர்.
தமிழக அரசுத் தரப்பு முகுல் ரோஹத்கி, ''தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின், எந்த நீதிமன்றத்தாலும் தேர்தலைத் தள்ளிப் போட முடியாது. தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசன அமைப்பு கூறியுள்ளது'' எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆம், ஆனால் நாடாளுமன்றம் என்ன விதிகளை வகுத்துள்ளதோ அதன்படி தேர்தல் நடைபெற வேண்டும். அதைத் தவிர்த்து குறுக்கு வழியில் தேர்தல் நடத்தப்படக் கூடாது” என்று தெரிவித்தனர்.
தமிழக அரசுத் தரப்புவழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “இங்கு குறுக்கு வழி இல்லையே. மேலும் இயற்கை பேரிடர் அல்லாது பிற காரணங்களுக்காக தேர்தல் தடைபடக் கூடாது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ இங்கு தேர்தலை நடத்தக்கூடாது என்று தடை கோரவில்லை. ஆனால் தேர்தல் நடத்தப்படும் விதி மீறப்பட்டுள்ளதாகவே இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
முகுல் ரோஹத்கி கூறுகையில், ''9 புதிய மாவட்டங்களுக்காக மறுவரையறைக்காக ஏன் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்? வேண்டுமெனில் 9 புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வையுங்கள்” எனத் தெரிவித்தார்
திமுக தரப்பு அபிஷேக் சிங்வி குறுக்கிட்டு, “தடை விதித்தால் மொத்தமாகத் தேர்தலுக்குத் தடை விதியுங்கள். இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கை 2 மணிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர், “ 9 மாவட்டங்களின் தேர்தலைத் தள்ளிவைக்க முடியுமா? என 2 மணிக்கு தேர்தல் ஆணையத் தரப்பு பதிலளிக்க வேண்டும். மொத்தமாக நடத்த வேண்டுமெனில் பிரிக்கப்பட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற்று நடத்த முடியுமா? என்பது தொடர்பாக எங்களுக்கு ஆலோசனை கொடுங்கள்” எனத் தெரிவித்தனர்.
இதற்கு தமிழகத் தேர்தல் ஆணையம் தரப்பில், “ 9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதத்தில், “அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த வேண்டும், தனித்தனியாகப் பிரித்து நடத்தக்கூடாது. ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ அது நடத்த சாத்தியமில்லை என எதிர் தரப்பில் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மறுவரையறை செய்யாத 9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தத் தயார் என தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, பிரிக்கப்பட்டு மொத்தமாக உள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago