ஈ-சிகரெட்டுகள் மீதான அவசரச் சட்டம் ஏன்? மக்களவையில் திமுக சரமாரி கேள்வி 

By ஆர்.ஷபிமுன்னா

ஈ-சிகரெட்டுகள் மீது அவசரச் சட்டம் இயற்ற வேண்டிய தேவை என்ன? என மத்திய அரசிடம் திமுக சராமரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இதை, அதன் மீதான மசோதாவில் அக்கட்சியின் தருமபுரி தொகுதி எம்.பி.யான டாக்டர் செந்தில்குமார் இன்று பேசியபோது எழுப்பினார்.

இது குறித்து டாக்டர் செந்தில்குமார் பேசியதாவது:

''ஈ-சிகரெட் மீதான அவசரச் சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. அதற்கு சற்று முன்பாக ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந்த சூழலில் அந்த அவசர மசோதாவைக் கொண்டு வரவேண்டிய அவசரம் என்ன? என்னவெல்லாம் அவசரச் சட்டத்தில் கொண்டு வரமுடியும்? அவசரமான சூழ்நிலைகளில் தேவைப்படக்கூடிய நடவடிக்கைகளுக்காக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும்.

0.02 சதவிகிதம் உள்ள ஈ-சிகரெட் தான் இந்த நாடு முழுவதும் முக்கியமாக அவசரமாகக் கொண்டு வரவேண்டிய அவசரச் சட்டமா? பலவிதமான அவசரமான சூழ்நிலைகள் இருக்கின்றன. அவற்றின் மீதும் நடவடிக்கை தேவைப்படுகின்றது.

உதாரணமாக, வறுமையை ஒழிப்பது, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், சமூகசமத்துவம் மற்றும் நீதி ஆகியவை ஈ-சிகரெட் அவசரச் சட்டத்தை விட மிகவும் முக்கியமானவையாகும்.

இதன் பின்னணியில் புகையிலை சிகரெட் நிறுவனங்களின் அழுத்தம் உள்ளதா என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது. ஈ-சிகரெட் என்றால் என்ன? ஈ-சிகரெட் என்பது பேட்டரியால் இயங்கக்கூடியதும், உள்இழுக்கும் போது நீராவியான நிகோடினை வெளியிடக்கூடியதும் ஆகும்.

ஆகவே புகையில்லாமல் புகையிலையை உள்ளிழுப்பதாகும். ஈ-சிகரெட்டுகள் என்பது புகையிலை சிகரெட்டுகளைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இதனை, பிப்ரவரி 18, 2018 தேதியிட்ட பிரிட்டனின் மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதில், 95 சதவீத ஈ-சிகரெட்கள், பாரம்பரிய புகைப்பிடிக்கும் முறையை விட மிகவும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பிரிட்டன் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலநாடுகளில் ஈ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டன.

திரும்பப் பெறப்பட்ட ஈ-சிகரெட் தடைகள்

ஆனால் இது பாரம்பரிய புகை பிடிக்கும் முறையை விட மிகவும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கூறப்பட்டு அந்தத் தடைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒரு மருத்துவராக ஹர்ஷவர்த்தனுக்குத் தெரிந்திருக்கும். ஈ-சிகரெட்டுகள், புகையிலை சிகரெட்டுகள் இரண்டும் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.

ஈ-சிகரெட்டுக்கு மட்டும் குறி ஏன்?

இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், நீங்கள் ஏன் ஒன்றை மட்டும் குறிவைக்கின்றீர்கள். நீங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள குறிக்கோள் மற்றும் காரணங்களின்படி, சர்வதேச நுரையீரல் புற்றுநோயை ஆராயக்கூடிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈ-சிகரெட்டுகள் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கவில்லை.

பலன் பெறும் அரசு

நான் கேட்பது என்னவென்றால் சர்வதேச நுரையீரல் புற்றுநோயை ஆராயக்கூடிய கூட்டமைப்பு புகையிலை சார்ந்த சிகரெட்டுகள் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கின்றதா, இல்லை. பின்னர் ஏன் அறிவியல் ஆதாரங்களை வெட்டி எடுத்து ஒட்டி அரசாங்கத்திற்குப் பயன்படுவது போல் செய்கின்றீர்கள்.

அறிவியல் ஆதாரங்கள்

அறிவியல்ஆதாரம் சார்ந்த தரவுகளை முன்வைக்கும்போது, முழுவதையும் முன்வைக்க வேண்டும். பிராண்டிங், விற்பனை உள்ளிட்டவற்றுக்காக புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்கள் சட்டம் உள்ளது.

அக்கறை கொள்வது உண்மையானால்...

100 சதவிகிதம் ஈ- சிகரெட்டுகளைத் தடை செய்வதற்கு முன்னால், ஈ-சிகரெட்டுகளை முறைப்படுத்தும் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டும். நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொள்பவர்களாக இருந்தீர்கள் என்றால், அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்தால் நீங்கள் அனைத்துவிதமான புகையிலைப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும்.

புகையிலை விவசாயத்திற்கு மாற்று

சில உறுப்பினர்கள் சொன்னது போல, சில விவசாயிகள் புகையிலையைப் பயிரிடுகின்றார்கள். நாம் அவர்களுக்கு மாற்று ஒன்றைக் கொடுக்கலாம். உங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால், இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டாம்.

தமிழகத்தில் குட்கா ஊழல்

தமிழ்நாட்டில் குட்கா தொடர்பான பொருட்களுக்குத் தடை உள்ளது. குட்கா விற்பனை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இங்கே அமைச்சர் உள்ளார், அவர் மீது மரியாதை உள்ளது.

அனைவருக்கும் வளர்ச்சி என்பதில் சந்தேகம்

எனவே குட்கா ஊழல் தொடர்பான விசாரணையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று விரும்புகின்றோம் இந்த அரசாங்கத்தின் கோஷங்களில் ஒன்றான அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி என்ற எண்ணம் மீது சந்தேகத்தின் நிழல் படிகின்றது.

புகையிலை சார்ந்த பொருட்களுக்குத் தடை

நீங்கள் அனைவருக்கும் கெடுதல் இல்லை என்ற எண்ணத்தை நிலைநாட்ட விரும்பினால், ஈ- சிகரெட்டைத் தடை செய்ததைப் போலவே, அனைத்து புகையிலை சார்ந்த பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று எங்களின் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றேன்''.

இவ்வாறு டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்