பெண் ஆர்வலர் திருப்தி தேசாயின் சபரிமலை செல்ல முயல்வதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்க வேண்டும் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால், 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் அங்கு செல்ல காலம் காலமாகத் தடை இருந்து வருகிறது. ஆனால் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
சபரிமலை தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மனுவை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதேசமயம், கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை விதிக்கவில்லை.
இந்நிலையில் பெண் உரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையில் சில பெண்கள் இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கொச்சி விமானநிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தார்கள். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், ஆணையர் அலுவலகத்தில் திருப்தி தேசாயுடன் வந்த கேரளப் பெண் ஆர்வலர் பிந்து அம்மணி மீது இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்துத் தாக்கினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை செல்ல போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ள திருப்தி தேசாயின் கோரிக்கையை போலீஸார் நிராகரித்துள்ளனர். அதேசமயம், பெண்கள் சபரிமலைக்குச் சென்றால் போலீஸ் பாதுகாப்பு வழங்க இயலாது. நீதிமன்ற உத்தரவு தேவை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கொச்சியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெண்ணிய ஆர்வலர் பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
சபரிமலைக்கு திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் செல்ல எடுத்துள்ள முடிவில், ஏதேனும் பின்புலத்தில் சதி இருப்பதாகவே அரசு சந்தேகிக்கிறது. புனேவில் இருந்து திருப்தி தேசாய் வந்துள்ளார். புனேவில் ஆர்எஸ்எஸ், பாஜக வலுவாக இருக்கும் இடம். சபரிமலையில் பக்தர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் அதைக் குலைக்கவே திருப்தி தேசாய் வந்துள்ளார்" எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறுகையில், " பெண்ணிய ஆர்வலர் பிந்து அம்மணியைத் தாக்கியதில் பாஜகவுக்கோ அல்லது சங்பரிவார் அமைப்புகளுக்கோ தொடர்பில்லை. தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அந்த நபர் எங்கள் கட்சியையோ அல்லது இந்து அமைப்புகளையோ சார்ந்தவர் அல்ல.
சபரிமலையின் பாரம்பரிய வழக்கங்கள், முறைகள் ஆகியவற்றைக் காக்கும் முனைப்பில் கேரள அரசு ஆர்வமாக இல்லை என்பது பக்தர்கள் மீண்டும் போராடி வருவதன் மூலம் தெரிய வருகிறது. சபரிமலையின் நம்பிக்கையைக் காப்பாற்ற மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலையின் பாரம்பரியத்தைக் குலைக்க விரும்புவோர்களைத் தடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதற்கிடையே பெண்ணிய ஆர்வலர் பிந்து அம்மணி மீது மிளகாய்ப் பொடி ஸ்பிரே அடித்தது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago