மக்களவையில் அமளியில் ஈடுபட்டபோது, தமிழகத்தின் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்.பி.க்களைப் பிடித்து, வலுக்கட்டாயமாக அவைக் காவலர்கள் தள்ளினார்கள் என்று காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகார் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக சார்பில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றதைக் கண்டித்தும், அங்கு நடக்கும் அரசியல் குழப்பங்கள் தொடர்பாகவும் மக்களவை இன்று தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டார்கள்.
மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் ஜனநாயகக் கொலை நடந்துள்ளது, கேள்வி நேரத்தில் எந்தக் கேள்வியும் இல்லை என்று காட்டமாகப் பேசினார்.
இதையடுத்து, அவையில் காங்கிரஸ்,என்சிபி, சிவசேனா எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஜனநாயகத்தைக் காப்போம், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்யாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திய காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
கேரள காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதாபன், ஹிபி எடன் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
மக்களவையை நடத்த முடியாத அளவுக்கு எம்.பி.க்கள் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
அவையின் மையப்பகுதியில் எம்.பி.க்கள் கோஷமிட்டபோது, அதில் பெண் எம்.பி.க்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து அவைக் காவலர்கள் தள்ளினார்கள் என்று காங்கிரஸ் சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், "அவையின் மையப்பகுதியில் எம்.பி.க்கள் அரசுக்கு எதிராகக் கோஷமிட்டு ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரக் கோரினோம். அப்போது அவையின் பாதுகாவலர்கள் எங்கள் கட்சியின் பெண் எம்.பி.க்களைப் பிடித்துத் தள்ளினார்கள்.
நாடாளுமன்றத்துக்குள் பெண் எம்.பி.க்களிடம் இதுபோன்று நடப்பதை இதற்கு முன் நாங்கள் பார்த்தது இல்லை. இந்தச் சம்பவத்தை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். பெண் எம்.பி.க்கள் உடலில் மீது கை வைத்து காவலர்கள் தள்ளுவது இதற்கு முன் பார்த்தது இல்லை. இது எங்களுக்கு சோதனைக் காலம். நாட்டில் சர்வாதிகாரம் இருக்கிறதா அல்லது ஜனநாயக ஆட்சி இருக்கிறதா என்பதை முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, கேரள காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் ஆகியோரை காவலர்கள் பிடித்துத் தள்ளினார்கள் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுகையில், " என்னையும், ரம்யா ஹரிதாஸையும் அவைக் காவலர்கள் பிடித்துத் தள்ளினார்கள். இதுகுறித்து அவைத் தலைவரிடம் புகார் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹிபி எடன், பிரதாபன் ஆகியோர் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டது தொடர்பாக மன்னிப்பு கோர வேண்டும் என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago