சிவசேனா என்சிபியுடன் சேரலாம்; என்சிபி பாஜகவுடன் சேர்ந்தால் மோசமா?- பிரகாஷ் ஜவடேகர் கேள்வி

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலால், கூட்டணி பிரிந்தது. இதனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமலும், ஆட்சி அமைக்க முடியாமலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின. 3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி கட்சி ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது.

முதல்வராக 2-வதுமுறையாக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக என்சிபி தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், " மகாராஷ்டிர முதல்வராகப் பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு என்னுடைய வாழ்த்துகள். மக்கள் அளித்த தீர்ப்பின்படி 2-வது முறையாக பட்னாவிஸ் முதல்வராக வந்துள்ளார்.

சிவசேனா, காங்கிரஸ், என்சிபி சேர்ந்து மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக கிச்சடி சமைத்தார்கள். மக்களோ பாஜக கூட்டணிக்குத்தான் வாக்களித்திருந்தனர். சிவசேனா மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது. மக்களின் தீர்ப்புக்குத் துரோகம் செய்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும், வீரசாவர்க்கருக்கும் எதிராக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா கைகோத்தது. காங்கிரஸ் கட்சியுடன் சென்று சிவசேனா மகிழ்ச்சியாக இருப்பது, ஊழலுக்கு மற்றொரு அர்த்தம். அவசர நிலையை அமல்படுத்துவது போன்றது.

சிவசேனாவின் வாதம் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறது பாருங்கள். சிவசேனா என்சிபி கட்சியுடன் சேரலாம். ஆனால், என்சிபி எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் வந்தால் அது மோசம். இன்று மக்களின் தீர்ப்புக்குத்தான் மதிப்பளிக்கப்பட்டுள்ளது" என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE