சபரிமலை போராட்டம் நடத்தும் இடமல்ல; பெண்களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்காது: அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டம்

By பிடிஐ

சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தும் இடம் அல்ல. அவர்களுக்கு அரசு ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தனர். ஆனால், 2 நீதிபதிகளான ரோஹின்டன் நாரிமன்,டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இருப்பினும் 5 நீதிபதிகள் அமர்வில் 3 பேர், 7 பேர் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைத்ததால், அந்தத் தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின் பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு வரும் 16-ம்தேதி செல்லப் போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் இன்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல, அவர்கள் விளம்பரம் தேடுவதற்கான இடமும் அல்ல. அவர்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவு அளிக்காது. பாதுகாப்பும் வழங்காது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் சில குழப்பங்கள் அரசுக்கு இருக்கின்றன. அதுகுறித்துத் தெளிவுபடுத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பும் பெண்கள், நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று வந்து சாமி தரிசனம் செய்யலாம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறுகையில், " சபரிமலை வழக்கில் நீதிமன்ற உத்தரவில் சில குழப்பங்கள் இருப்பதால், சட்ட வல்லுநர்களுடன் பேசி விளக்கத்துடன் செயல்படுவோம். நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு தயாராக இருக்கிறது. அது எந்த உத்தரவாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துவோம்" எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி சபரிமலைக்கு இருமுடியுடன் சென்ற பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அவர்கள் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் சாதகமான கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு உத்தரவுக்குத் தடை விதிக்கவில்லை. அயோத்தி தீர்ப்பை சங் பரிவார் அமைப்புகள் வரவேற்கும்போது, இந்தத் தீர்ப்புக்கும் மரியாதை அளிக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு அரசும் போலீஸாரும் பாதுகாப்பு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே சபரிமலை சீராய்வு மனு விசாரணையில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரோஹின்டன் நாரிமன் இன்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அறிவுரை வழங்கினார்.

அதில், "சபரிமலை விவகாரத்தில் நாங்கள் வழங்கிய தீர்ப்பைக் கவனமாக உங்கள் அதிகாரிகளைப் படிக்கச் சொல்லுங்கள். எங்களுடைய தீர்ப்பில் விளையாட்டுத்தனம் கூடாது என்பதைச் சொல்லிவிடுங்கள். தீர்ப்பைக் கவனமாகப் படித்துப் பார்த்து, அரசியலமைப்புப் பிரிவு 141 குறித்து நீதிமன்றம் என்ன தெரிவித்துள்ளது என்பதைக் கனிவுடன் படிக்கச் சொல்லுங்கள். எங்கள் உத்தரவுகளை அதிகாரிகள் சரியாகப் பின்பற்றுவதில்லை என்ற தோற்றம் இருந்து வருகிறது. எங்களின் உத்தரவுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். விதிமுறை மீறல் நடப்பதை அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதா அல்லது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்காமல் தவிர்ப்பதா எனும் குழப்பத்தில் கேரள அரசு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்