மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிரி அல்ல. நிலையான ஆட்சி அமைக்க ஆதரவளித்தால் வரவேற்போம் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாஜகவைக் கழற்றிவிட்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைக்கும் காய்களை சிவசேனா நகர்த்தத் தொடங்கி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்கு, பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
ஆட்சியில் சமபங்கை சிவசேனா கேட்டு பிடிவாதம் செய்கிறது. ஆனால், அவ்வாறு எந்த வாக்குறுதியும் தரவில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே இழுபறி கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷியாரி நேற்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததை சிவசேனா வரவேற்கிறது. மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். ஆனால், தனிப்பெரும் கட்சியாக இருந்துகொண்டு பாஜக ஏன் இத்தனை நாட்களாக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதுதானே?
ஆனால் என்னைப் பொறுத்தவரை பாஜகவுக்குப் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கும், ஆட்சி அமைக்கும் அளவுக்கும் போதுமான வலிமை இல்லை என நினைக்கிறேன். நவம்பர் 11-ம் தேதி இரவு 8 மணிக்குள் பாஜகவின் முடிவு குறித்து அறிந்துவிடுங்கள் என்று கூறிவிட்டோம்.
இன்று பிற்பகலில் எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரே எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆட்சி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுப்போம்".
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மற்ற கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் ஏதேனும் டீல் பேசி வருகிறீர்களா என்று நிருபர்கள் ராவத்திடம் கேட்டனர். அதற்கு ராவத் அளித்த பதிலில், "மற்ற கட்சியை (பாஜக) போல் குதிரை பேரத்தில் எல்லாம் நாங்கள் ஈடுபடமாட்டோம். அரசியல் என்பது வியாபாரம் அல்ல, லாபம், நஷ்டம் கணக்கு பார்ப்பதற்கு. சிவசேனா அகராதியில் அரசியலில் லாபம், நஷ்டம் என்ற வார்த்தை இல்லை.
எந்தக் கட்சியின் எம்எல்ஏக்களும் கட்சி மாறி செல்லமாட்டார்கள் என்றுதான் நம்புகிறேன். யாரேனும் எந்தக் கட்சியையாவது உடைத்து எம்எல்ஏக்களை இழுக்க முயன்றால் இந்த நேரத்தில் அது பயன்தராது. அதேபோன்று எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கும் அகந்தை, அகங்காரம் மிகுந்த போக்கும் நீண்ட காலத்துக்கு மகாராஷ்டிராவில் வேலை செய்யாது. நீர்க்குமிழி நீண்டநாட்களுக்கு இருக்காது வெடித்துவிடும்.
உத்தவ் தாக்கரேதான் சிவசேனா தலைவர். சரியான நேரத்தில் தகுந்த முடிவை அவர் எடுப்பார். சிவசேனாவில் இருந்துதான் ஒருவர் முதல்வராக வர உள்ளார் என்பதைக் கூறிவிட்டோம்" எனத் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் குறித்து சிவசேனா விமர்சிக்காதது ஏன் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு சஞ்சய் ராவத் கூறுகையில், "நாங்கள் தேர்தலுக்குப் பின் பாஜகவைக் கூட விமர்சிக்கவில்லை. தேர்தல் முடிந்த பின் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது தேவையற்றது" எனத் தெரிவித்தார்
சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தால் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு ராவத் பதில் அளிக்கையில், "சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவுக்கு எதிரி அல்ல. மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் தலைவர் ஆதரவளித்தால், முடிவு எடுத்தால் அதை சிவசேனா வரவேற்கும்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும், மற்ற கட்சியுடன் முரண்பட்டதுதான். சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் முரண்பாடு இருக்கிறது. கர்நாடக பாஜகவுககும், சிவசேனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையில் முரண்பாடு இருக்கிறது " எனத் தெரிவித்தார்
பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago