தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கே.பராசரன் நாட்டின் பிரபல வழக்கறிஞர். இந்திரா, ராஜீவ் காலத்தில் சட்டரீதியான நாட்டின் உயர்ந்த பதவியான அட்டர்னி ஜெனரல் பதவி வகித்தவர். பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவர். அவரது மகன் மோகன் பராசரன் 2004 முதல் 2013 வரை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்து சொலிசிட்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றவர்.
நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சி மாறியதும், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பத்து ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் உயர் சட்ட அதிகாரி என்ற முறையில் நெருக்க மாக இருந்த அவர் "தி ஹிந்து" நாளிதழின் மூத்த நிருபர் சண்முகத்துடன் உரையாடியபோது மனம் திறந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
முழு பேட்டி விவரம்:
நாட்டின் உயர்ந்த சட்ட அதிகாரி பதவிகளில் ஒன்றான சொலிசிட்டர் ஜெனரல் பதவியை வகித்துள்ளீர்கள். கடந்த அரசுடன் உங்களது 10 ஆண்டு அனுபவம் எப்படி இருந்தது?
நான் அரசு வழக்கறிஞராக ஒருபோதும் இருந்ததில்லை. தனியாருக்கு வாதிட்டு வந்த நான் அரசின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டேன். நான் சந்தித்த வழக்குகள் அனைத்துமே மிக முக்கியமான வழக்குகள். எதிரில் வந்து வாதாடுபவர்களும் கை தேர்ந்த சட்ட நிபுணர்களாக இருந்த னர். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத் துவமனையில் வேலைபார்த்த டாக்டர் அரசு பொது மருத்துவ மனைக்கு வந்ததைப் போன்ற உணர்வைப் பெற்றேன்.
இப்பணியில் இருந்தபோது, அரசின் ஒவ்வொரு செயல்பாடு களையும் அரசு இயந்திரத்தின் இயக்கத்தையும் மிக ஆழமாக அறிந்துகொள்ள முடிந்தது. நான் இருந்த 10 ஆண்டுகளுமே கூட்டணி ஆட்சி இருந்ததால், பல நேரங்களில் மத்திய அரசு கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு இணங்கி பல முடிவு களை எடுக்க வேண்டி வந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றை சந்திக்க வேண்டி வந்தது.
புகையிலை வரி, கிரிக்கெட் வாரியம் அரசு அமைப்பா?, வாகன பாதுகாப்பு நம்பர் பிளேட், உணவுப் பாதுகாப்பு, எம்பி-க்கள் நிதி உள்ளிட்ட பல வழக்குகளை அரசியல் சாசன அமர்வு வரை சென்று வாதிட வேண்டிய நிலை இருந்தது. என் வாதத்திற்கு பல வழக்குகளில் வெற்றி கிடைத்தது.
ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது, ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தது, பத்திரிகையாளர் ஊதியக் குழு, கட்டாயக் கல்வி உரிமை உள்ளிட்ட பல வழக்குகளில் என் முயற்சியால் நல்ல தீர்ப்புகள் கிடைத்தன. நான் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராமர் பாலம் வழக்கு உள்ளிட்ட தமிழகம் சார்ந்த வழக்குகளில் இருந்து நானே விலகிக் கொண்டேன்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியாளர் களிடம் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருந்ததா?
சொலிசிட்டர் ஜெனரல் பணியில் எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருந்தது. நான் சோனியாவை சந்திக்கும்போது, அரசில் என்ன நடக்கிறது என்று என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார். அந்த அளவுக்கு அவர் அரசு நடவடிக் கையில் தலையிட்டதே இல்லை. முக்கிய வழக்குகளிலும் அவர் தலையீடு இருந்ததே இல்லை.
காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற முக்கிய வழக்குகள் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருப்பது பற்றி?
மாநில அரசுகள்தான் இதற்கு காரணம். மக்களின் உணர்வுகளைத் துாண்டிவிட்டு, அரசியலுக்காகவும், வாக்குகளுக்காகவும் இழுத்தடிக் கின்றன. சம்பந்தப்பட்ட மாநில மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் இப்பிரச்னையே இருக் காது. தெலங்கானா மாநிலப் பிரி வினை தேவையற்றது. அரசியலுக் காக மக்களையும் மாநிலத்தை யும் கூறுபோட்டுள்ளனர்.
ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் தொடர்புடைய வழக்குகள் நீண்ட காலமாக நடக்கிறதே?
வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிடும் அதே நீதிமன்றம் தான் வழக்குக்கு தடையும் விதிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒரு வழக்கை எடுத்துக் கொண் டால், அந்த வழக்கு தொடர்ந்ததில் இருந்து தீர்ப்பு அளிக்கும் வரை உள்ள அனைத்து நடைமுறைகளும் தேதியுடன் பட்டியலிடப்பட்டு விடும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. அதுபோன்ற சட்ட நடைமுறை இங்கு வர வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் `கொலீஜியம்' எனப்படும் நீதிபதிகள் நியமனக் குழுவை ஆதரிக்கிறீர்களா? அரசின் நீதிபதிகள் நியமனக்குழுவை ஆதரிக்கிறீர்களா?
எதுவாக இருந்தாலும் நீதிபதி கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. லோக்பால் நியமனத் தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு போடும்போது, நீதிபதிகள் நியமனத்தில் ஏன் அப்படி இருக்கக் கூடாது?
சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதிகளை நியமிப்பதும் தவறு. அதற்கு கம்ப்யூட்டர் ரோபோட் போதுமே. நியமனக்குழு எதற்கு? தகுதியைப் பார்த்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும். தலைமை நீதிபதி பதவிக்கு குறிப்பிட்ட கால அளவு நிர்ணியிக்க வேண்டும் என்பதையும் நான் ஏற்க மாட்டேன்.
ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சினை களில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதே?
காலம் மாறுகிறது. நேற்று இருந்த நிலை இன்று இல்லை. விலங்குகளின் உரிமைகள் பற்றி பேசும் நிலை வந்துவிட்டது. எனவே, மாற்றத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
நீதித் துறையில் என்ன மாற்றங்கள் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
மிகச் சிறந்த நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் உள்ளது. உயர் நீதிமன்றங்களும் ஓரளவுக்கு பாராட்டும்படி உள்ளன. ஆனால், சில உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்கள் சில சக்திகளால் நடுநிலையோடு செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. இத னால், சில உயர் நீதிமன்றங்களின் தரம் தாழ்ந்து வருகிறது. இது, நீதித்துறைக்கு நல்லதல்ல.
குறிப்பாக, பார் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களை அரசியல், சாதி ரீதியாக சிலர் கைப்பற்றி இயக்கி வருகின்றனர். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கோருகின்றனர். தகுதியின் பேரில்தான் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
என் தந்தை பராசரன், இதர பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கான நாகராஜ் வழக்கு, மண்டல் வழக்குகளில் ஆஜராகி உரிமை பெற்றுத் தந்தவர். கல்வி உரிமைச் சட்டத்துக்கு நான் வாதாடி உள்ளேன்.
மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளை அமைய வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?
இந்தக் கோரிக்கையை 50 ஆண்டுகளுக்கு முன் வைத்திருந் தால் ஏற்கக் கூடியதாக இருந்திருக் கும். இப்போது அது தேவை யில்லை. உச்ச நீதிமன்றத்தில் நடை பெறும் வழக்கில் சென்னையில் இருந்து கொண்டே வழக்கறிஞர் வாதாடலாம். அதற்குரிய தொழில் நுட்பம் வந்துவிட்டது. அதை அமல்படுத்த கோருவது தான் பொருத்தமாக இருக்கும்.
புதிய சொலிசிட்டர் ஜெனரல் ஓரிரு தினங்களில் நியமனம்
புதிய சொலிசிட்டர் ஜெனரல் இன்னும் ஓரிரு தினங்களில் நியமிக்கப்படுவார். அதுவரை தற்காலிக சொலிசிட்டர் ஜெனர லாக நான் இருப்பேன் என்று மோகன் பராசரன் கூறியுள்ளார்.
மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்ததையடுத்து, அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி, சொலி சிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் இருவரும் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்கி நியமிக் கப்படுவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், மோகன் பராசரன், ‘தி இந்து’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘என் ராஜினாமா கடிதம் மத்திய அரசால் ஏற்கப் பட்டு விட்டது. புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்கி நியமிக்கப்படுகிறார். சொலிசிட்டர் ஜெனரல் விரைவில் நியமிக்கப்பட உள்ளார். சட்டத்துறை அமைச்ச கத்திடம் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. பதவி காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக புதிய சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்படும் வரை என்னை இப்பதவியில் தொடரும் படி கேட்டுக் கொண்டனர். வழக்குகளிலும் ஆஜராகும்படி கூறினர். நான் தற்காலிகமாக இப்பதவியில் இருக்க சம்மதித் துள்ளேன். ஆனால், வழக்குகளில் ஆஜராக மறுத்து விட்டேன். திங்கள்கிழமைக்குள் புதிய சொலி சிட்டர் ஜெனரல் நியமிக்கப்பட்டு விடுவார்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago