'தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்' என்ற வழக்கமான குரலுடன், யாகூப் மேமன் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிடம் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள், முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் என நம் சமூகத்தில் கவனிக்கத்தக்க பலர் கையெழுத்திட்ட அந்தக் கோரிக்கை மனுவுடன், இந்திய உளவு அமைப்பில் முக்கியப் பங்குவகித்த மறைந்த அதிகாரி பி.ராமன் எழுதிய கட்டுரை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
உளவு அமைப்பு 'ரா'-க்கு தலைமை வகித்தவரும், பாகிஸ்தான் பிரிவை கவனித்து வந்தவருமான பி.ராமன் எழுதிய அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம், 'யாகூப் மேமனை தூக்கிலிடக் கூடாது... ஏன்?' என்பதே. | அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவம் கீழே உள்ளது.|
யாகூப் மேமன் தூக்கு தண்டனை வழக்கின் தற்போதைய நிலை இதுதான்: 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 257 பேர் இறந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவ்வழக்கில் யாகூப் மேமனு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே யாகூப் மேமனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து கடைசி சட்ட நிவாரணமாக கருதப்படும் கியூரேட்டிவ் மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 21-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து யாகூப் மேமனை நாக்பூர் மத்திய சிறையில் வரும் 30-ம் தேதி தூக்கில் இடுவதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டது.
இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் யாகூப் மேமன் கருணை மனு தாக்கல் செய்தார். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். "எனக்கு சட்டரீதியான பரிகாரங்கள் இன்னும் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர அரசு அளவுக்கு மீறி அவசரம் காட்டுகிறது" என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வேளையில், மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணைகள், உத்தரவுகள், நடவடிக்கைகள் முதலானவற்றை சற்றே சுருக்கமாக பின்னோக்கிப் பார்ப்போம்.
தூக்கிலிடுதலின் அரசியல் பக்கம்:
1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனுக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேரின் வாக்குமூலங்கள் அடிப்படையில் மேமன் குற்றவாளி என்று முடிவுகட்டப்பட்டார். இந்த 6 பேரில் 5 பேர் பிற்பாடு மறுதலித்தனர் என்பதும் குறிப்பிடத்தகக்து.
குண்டுவெடிப்புகளுக்கு நிதியுதவி அளித்தாக யாகூப் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் அதனை தெரியாமல் செய்ததாகக் கூறினார். இவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அதாவது உண்மையில் குண்டு வெடிக்கச் செய்தவர்கள் குறைந்த தண்டனையைப் பெற்றுள்ளனர். அல்லது அவர்களது மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புகளுக்காக தூக்கிலிடப்படும் ஒரே நபரானார் யாகூப் மேனன்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் பாதுகாப்பை உதற முடிவெடுத்து அந்த 'கடிமனான மற்றும் ஆபத்து விளைவிக்கக் கூடிய' நடைமுறையை விளக்கி, 1999-ம் ஆண்டு இந்திய தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார் யாகூப் மேமன்.
1994-ம் ஆண்டின் அவரது இந்த முடிவுக்குப் பிறகே விசாரணையில் அவர் முழு ஒத்துழைப்பு வழங்கியதோடு, சதியில் ஈடுபட்ட தனது குடும்பத்தினரையும் ஐ.எஸ்.ஐ. பிடியிலிருந்து வெளியேற்றி சரணடையச் செய்ய இணங்க வைக்கும் முயற்சியில் விசாரணை அதிகாரிகளுக்கு பெருமளவு உதவி புரிந்துள்ளார்.
சதி தொடர்பான முக்கிய விவரங்களையும் விசாரணையில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் பின்னணியிலேயே ராமன், யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளதாக எழுதினார்.
இந்நிலையில், ஜூலை 30-ம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் உத்தரவு வெளியாகியுள்ள நிலையில், இந்த உத்தரவில் ஏகபப்ட்ட சட்டப்பிறழ்வுகள் இருப்பதாகவும் விஷயஜீவிகளும் சட்ட நிபுணர்கள் சிலரும் கருதுகின்றனர்.
முதலில் சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சட்ட அணுகுமுறைகளும் முடிந்த பிறகே தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப் படவேண்டும் என்று விதிமுறைகள் கூறுகிறது.
மேமன் விவகாரத்தில் ஜூலை 30-ம் தேதி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. ஆனால், அவரிடம் இந்தத் தகவல் அளிக்க வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்பட்டுள்ளதும் தற்போது யாகூபின் ரிட் மனு தாக்கலின் போது தெரியவந்துள்ளது.
தூக்குத் தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பாக குற்றவாளி அதனை எதிர்த்து சாத்தியமாகக் கூடிய சட்ட நடைமுறைகளை அணுக வாய்ப்பளிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியம். ஆனால் அவர் சட்டத்தின் உதவியை நாட முடியாதவாறு உத்தரவு அவசரம் அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு இருக்கும்போது, ஏப்ரல் 30-ம் தேதி மாநில அரசு எப்படி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவை பெற முடியும்? அப்போது ஜூலை 21, 2015-ல் யாகூப் மேமனின் கியூரேட்டிவ் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று மாநில அரசுக்கு முன் கூட்டியே தெரியுமா?
இது போன்ற ஏராளமான சீரற்றத் தன்மைகளும் கேள்விகளும் இந்த உத்தரவின் மூலம் எழுவதாக நிபுணர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பி.ராமன் கட்டுரை சொல்வதுதான் என்ன?
சரி, இந்த மரண தண்டனை வழக்கில் மிக முக்கியமானதாக பேசப்பட்டு வருகிறது பி.ராமனின் கட்டுரை. யாகூப் மேமனை ஏன் தூக்கிலிடக் கூடாது? என்று வினவி, 'மேமன் சகோதரர்களும் மும்பை குண்டு வெடிப்புகளும்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:
'யாகூப் மேமனை தூக்கிலிடும் நீதிமன்ற உத்தரவையும், நீதிமன்றத்தில் யாகூப் மேமனின் திடீர் கோபாவேசம் பற்றியும் ஊடகங்கள் மூலம் நான் படித்தறிந்த பிறகு என மனம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டது.
இந்த விசாரணைக் காலம் முழுதும் அரசு தரப்பு கோருவது போல் 'நான் பழைய டெல்லியில் கைது செய்யப்படவில்லை, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டேன்' என்று யாகூப் மேமன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனை அரசு தரப்பு ஏற்காமல், அவருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதாடியது.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு, மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டால், இந்திய குடியரசுத் தலைவரிடம் கருணை மனு கொடுக்கவும் உரிமை உண்டு.
இந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டுமா? என்று என்னையே நான் பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டு வருகிறேன். நான் எழுதாமல் விட்டால் நான் ஒரு தார்மிகக் கோழையாகிவிடுவேனோ? நான் இதனை எழுதிவிட்டால், இந்த வழக்கின் ஒட்டுமொத்த முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு விடுமா? சந்தேகத்துக்கிடமற்ற குற்றவாளி எனது கட்டுரையினால் தப்பி விடக்கூடிய வாய்ப்புள்ளதோ? எனது கட்டுரையை நீதிமன்றம் தீங்கானது என்று கருதுமோ? நான் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறேனோ?
இந்தக் கேள்விகளுக்கு உறுதியான பதில்கள் கிடையாது. இருந்தாலும் நான் ஏன் இதனை எழுத முற்பட்டேன் என்றால், என்னுடைய பார்வையில், தூக்கிலிடப்படக் கூடாது என்று நான் நினைக்கும் ஒருவரைக் காப்பாற்றுவது முக்கியம் என்ற எனது நம்பிக்கையாகும்.
'ரா' உளவு அமைப்பின் பயங்கரவாத - எதிர்ப்பு பிரிவின் தலைவராக, மார்ச் 1993 முதல் ஆகஸ்ட் 31, 1994 வரை நான் இந்த வழக்கின் புறவிவகாரங்களை விசாரணை செய்துள்ளேன். ரா அமைப்பின் மிகச் சிறந்த கள அதிகாரிகள் உதவியுடன் நான் இந்த விசாரணையில் மேற்கொண்ட பணிகளை பி.வி.நரசிம்ம ராவ் வெகுவாக பாராட்டினார். அப்போதைய பிரதமரான அவர், இந்த வழக்கு விசாரணையின் புற விவகாரங்கள் தொடர்பான எங்களது வேலைகளை தங்கத்துக்குச் சமமானது என்று பாராட்டினார்.
யாகூப் மேமன் வழக்கில் அவருக்கு எதிரான சூழ்நிலைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் இருப்பதை நான் கண்டுணர்ந்தபோது, நான் மன தொந்தரவுக்குள்ளானேன். யாகூப் மேமனின் குடும்பத்தினர் சிலரை இந்த வழக்கில் அரசு தரப்பு நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரவில்லை. மேலும், இந்தச் சூழ்நிலைகளை இந்த வழக்கு பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்பதையும் அரசு தரப்பினர் நீதிமன்றத்துக்கு வலியுறுத்தவில்லை. அவருக்கு மரண தண்டனை பெற்றுத் தரும் ஆர்வத்தில் தண்டனையைத் தீர்மானிக்கும் சில மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்படவில்லை.
மும்பை போலீஸ் மற்றும் சிபிஐ ஆகியவை ஐபி அமைப்பின் உதவியுடன் நடத்திய மிகச் சிறந்த விசாரணையாகும் இது. இறுக்கமான இந்த வழக்கில் விசாரணையைக் கையாண்டு, வலி நிறைந்த ஒரு பணியில் அனைத்துச் சாட்சிகளையும் சேகரித்து நீதிமன்றத்தின் முன்னால் வைத்த அதிகாரிகள் குறித்து இந்த தேசம் பெருமைகொள்ள வேண்டும்.
எனவே, பயங்கரவாதம் என்ற காட்டுமிராண்டிச் செயலை நடத்தியவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படவேண்டும் என்றாலும், அரசு தரப்பினர் மரண தண்டனை கோரக் கூடாது என்பதற்கான மாற்று, மட்டுப்படுத்தக் கூடிய சூழ்நிலைகளை நீதிமன்றத்துக்கு இந்த விசாரணையாளர்கள் அடிக்கோடிட்டுக் காட்டும் முயற்சியை எடுத்திருந்தால் இந்த விசாரணையாளர்களின் மீதான் ஒளிவட்டம் இன்னும் பிரகாசமாகக் கூட ஒளிவிட்டிருக்கும்.
யாகூப் மேமன் பழைய டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்று அரசு தரப்பு கூறுவது சரிதான். தன்னை அவர்கள் டெல்லியில் கைது செய்யவில்லை என்று யாகூப் மேமன் கூறுவதும் சரிதான். ஜூலை 1994-ல், எனது ஓய்வுக்கு சில வாரங்கள் முன்னதாக, காத்மாண்டுவில் யாகூப் மேமனை நேபாள காவல்துறை உதவியுடன் பிடித்துள்ளனர். நேபாளத்தின் வழியாக வாகனத்தில் இந்திய ஊர் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டு, பிறகு வான்வழி ஆய்வு மைய விமானம் மூலம் டெல்லியில் அவர் கொண்டு வரப்பட்டு முறைப்படி கைது செய்யப்பட்டார். பிறகு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த இத்தனை நடவடிக்கையையும் எனது ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்றது.
யாகூப் மேமன் காத்மாண்டுவுக்கு வந்த காரணம், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மீது கடும் அதிருப்தி ஏற்பட்டதால், காத்மாண்டுவில் உள்ள தனது உறவினர் மற்றும் வழக்கறிஞரைச் சந்தித்து ஆலோசனை பெற வந்திருந்தார். அதாவது, மும்பை போலீஸ் முன்பு சரணடைய அவர் ஆலோசனை மேற்கொள்வதற்காக காத்மாண்டு வந்திருந்தார்.
உறவினர் மற்றும் வழக்கறிஞர் 'சரணடைய வேண்டாம்' என்று அறிவுறுத்தினர். காரணம், நீதி கிடைக்காமல் போகலாம் என்று அவர்கள் எச்சரித்தினர். எனவே, கராச்சிக்குத் திரும்பிவிடுமாறு யாகூபுக்கு அவர்கள் ஆலோசனை வழங்கினர். அவர் கராச்சிக்கு விமானம் ஏறுவதற்கு முன்னதாக நேபாள போலீஸால் சந்தேக அடிப்படையில் பிடிக்கப்பட்டார். அவசரம் அவசரமாக இந்தியா கொண்டு வரப்பட்டார்.
அவர் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். மேலும் ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில் இருந்த யாகூப் மேமனின் மற்ற குடும்ப உறுப்பினர்கள் கராச்சியிலிருந்து துபாய்க்கு வந்து மும்பை போலீஸில் சரணடைய இணைங்க வைக்க, விசாரணை அதிகாரிகளின் நடைமுறைக்கு யாகூப் மேமன் உதவினார். இந்த நடவடிக்கையின் துபாய் பகுதியை ஐபி மூத்த அதிகாரி ஒருங்கிணைத்தார். துபாய் நடவடிக்கைக்கு நானோ, ரா-வோ பங்களிப்பு செய்யவில்லை.
எனவே, விசாரணை அதிகாரிகளுக்கு யாகூப் மேமன் வழங்கிய ஒத்துழைப்பும், குடும்பத்தினரை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றி சரணடைய வைத்ததற்கு யாகூப் மேமனின் உதவியும் என்னுடைய பார்வையில், மரண தண்டனை பற்றிய பரிசீலனைகளை மட்டுப்படுத்தும் சூழ்நிலைகள் ஆகும்.
சதியில் யாகூப் மேமனோ அவரது குடும்பத்தினரோ ஈடுபட்டது குறித்தோ, அல்லது ஜூலை 1994 வரை ஐ.எஸ்.ஐ உடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பு பற்றியோ எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, ஒரு சாதாரண சூழ்நிலைகளின் படி, ஜூலை 1994-கு முன் யாகூப் மேமனின் நடத்தை மற்றும் செயல்கள் அவருக்கு மரண தண்டனை அளிக்க தகுதியான நியாயங்களை வழங்கியிருக்கும்.
ஆனால், காத்மாண்டுவில் அவர் பிடிபட்ட பின்பு அவரது ஒத்துழைப்பு மற்றும் செயல்கள் இந்த வழக்கு விசாரணையின் அடுத்த கட்டங்களில் மரண தண்டனை விதிப்பின் பொருத்தப்பாடு பற்றிய மாற்றுக் கேள்விகளை எழுப்புகிறது.'
ஆதார ஆங்கிலக் கட்டுரைகள்:
>Eminent persons request President to consider Yakub Memon's mercy plea
>Raman's unpublished 2007 article: Why Yakub Memon must not be hanged
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago