பிரதமர் மோடி, ஷேக் ஹசினா கூட்டாக 3 திட்டங்கள் தொடக்கம்: 7 ஒப்பந்தங்களில் கையொப்பம் 

புதுடெல்லி

பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இருவரும் கூட்டாக இன்று 3 திட்டங்களை தொடங்கி வைத்தனர், இரு நாடுகளுக்கும் இடையே இடையே 7 ஒப்பந்தங்கள் கையொப்பமானது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்றநிலையில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து ஷேக் ஹசினா பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு, பாதுகாப்பு, வர்த்தகம், கலாச்சாரம், இளைஞர் விவகாரம், நீர்பகிர்மானம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.

இன்று ஒரே நாளில் பிரதமர் ஷேக் ஹசினாவும், பிரதமர் மோடியும் சேர்ந்து 3 திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். அதில் குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான எல்பிஜி எரிவாயுவை வங்கதேசத்தில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதாகும். இதுவரை கடந்த ஒரு ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 12 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன, அதில் 3 திட்டங்கள் இன்றே தொடங்கப்பட்டன.

பிரதமர் ஷேக் ஹசினாவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி நிருபர்களிடம் கூறுகையில், " வங்கதேசத்துடன் நெருங்கிய நட்புறவை வைத்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு உலகிற்கே உதாரணமாக இருத்தல் வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இந்த பேச்சின் மூலம் மேலும் வலுப்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் இருவரும் சேர்ந்து 12 திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம்.அதில் 3 திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டன " எனத் தெரிவித்தார்

பிரதமர் ஷேக் ஹசினா நிருபர்களிடம் பேசுகையில் " இந்தியா, வங்கதேசம் இடையிலான நட்புறவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான முறையில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வ பணிகளுக்கான அணு சக்தி, வர்த்தகம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்குஇடையே நல்ல உறவு இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பிரதமர் ஷேக் ஹசினா பேசினார். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் கருத்து பதிவிடுகையில், " வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. வங்கதேசத்துடன் உயர்ந்த அளவிலான நட்புறவை வைக்க இந்தியா முன்னுரிமை அளிக்கும்" எனத் தெரிவித்தார்

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE