தூய்மை இந்தியா திட்டத்தில் மைல்கல்: 2,300 நகரங்களில் 57 ஆயிரம் பொதுக் கழிவறை இடங்களைக் காண்பிக்கும் கூகுள் மேப்

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கிய தூய்மை இந்தியா திட்டத்தின் மைல்கல்லாக, நாட்டில் 2,300 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 57 ஆயிரம் பொதுக்கழிவறை இடங்களை 'கூகுள் மேப்' காண்பித்துள்ளது

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில் அவரின் கனவை மெய்பிக்கும் வகையில் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை கூகுள் நிறுவனம் காண்பிக்கிறது.

பொதுவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி பிரதமர் மோடி ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் இதுவரை நாட்டில் 11 கோடி கழிவறைகள் ரூ.1.96 லட்சம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியுடன் பொதுக் கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா மாறுகிறது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

இதற்கிடையே 'கூகுள் சர்ச்' மற்றும் 'கூகுள் மேப்' ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் பொதுக் கழிவறை குறித்து 2.50 லட்சம் பயன்பாட்டாளர்கள் தேடுகிறார்கள். தொடக்கத்தில் கூகுள் மேப் செயலியில், பொதுக் கழிவறை இடங்களைச் சேர்ப்பது சோதனை முயற்சியாகவே இருந்தது.

2016-ம் ஆண்டில் புதுடெல்லி, போபால், இந்தூர் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ள பொதுக்கழிவறைகள் சேர்க்கப்பட்டன. ஆனால், ஸ்வச்பாரத் திட்டம் மற்றும் மத்திய வீடு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணைந்த பின் கூகுளில் கழிவறை இடங்களைச் சேர்க்கும் பணி தீவிரமானது.

தற்போது 2 ஆயிரத்து 300 நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்காக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 57 ஆயிரம் கழிவறைகளுக்கான இடங்களையும் கூகுள் மேப்பில் தரப்பட்டுள்ளது

இதுகுறித்து கூகுள் மேப்பின் மூத்த மேலாளர் அனல் கோஷ் கூறுகையில், " பொதுக்கழிவறை எங்கிருக்கிறது என்ற தகவலை நாங்கள் வழங்குவது மக்களுக்கு மிகவும் துணை புரியும். ஸ்வச் பாரத் திட்டத்தின் நோக்கத்தை அடைய வழிவகுக்கும்.

இதன் மூலம் மக்களின் கழிவறை பயன்பாடு அதிகரித்து, சுத்தமான, சுகாதாரமான சூழலில் வாழ்வார்கள்.
கூகுள் சர்ச்சில் சென்று 'பப்ளிக் டாய்லட் நியர் மி' என்று தேடினால், அருகில் உள்ள கழிவறை விவரங்கள் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE