இந்திய கடற்பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி

இந்திய கடற்பகுதியில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களுக்கான அச்சுறுத்தல் தொடர்ந்து இருக்கிறது, பாகிஸ்தான் கொடிய செயல்களில் ஈடுபட்டு இந்தியாவை சீர்குலைக்க முயல்கிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்

விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் நேற்று இரவுமுழுவதும் பயணித்துவரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதைத் தெரிவித்தார்.

தற்போது கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவரும் விக்ரமாதித்யா கப்பலில் பயணித்து வரும் ராஜ்நாத் சிங் வீரர்களுடன் சேர்ந்து காலையில் யோகாவில் ஈடுபட்டார். அதன்பின் மற்ற கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள் செய்த போர் பயிற்சிகளை பார்வையிட்டார்.

அதன்பின் ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு கப்பலில் இருந்தவாரே அளித்த பேட்டியில் கூறியதாவது:

நம்முடைய இந்தியக் கடற்பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. எந்த நாடும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் தவறில்லை. அதேசமயம், தீவிரவாத தாக்குதல் நடக்காது என்றும் இருந்துவிடக்கூடாது.

நமது அண்டை நாடான பாகிஸ்தானைப் பற்றி நன்கு தெரியும், அவர்கள் கொடூரமான செயல்கள் மூலம் இந்தியாவை சீர்குலைக்க முயல்கிறார்கள்.

ஆனால், நான் இந்திய கடற்படையின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன், ஏனென்றால் கடற்படை பாதுகாப்பு, ரோந்துப் பணியில் தவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடம் அளிக்க மறுக்கிறார்கள்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியில் மும்பையில் நடந்த தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. சில தவறுகள் ஒருமுறைதான் நடக்க வேண்டும், கண்டிப்பாக மறுமுறை எந்த விலை கொடுத்தேனும் நடக்க அனுமதிக்க கூடாது. அதனால்தான் நம்முடைய கடற்படையும், கடற்படைப் பாதுகாப்பு படையினரும் தொடர்ந்து கண்காணிப்புடன் இருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் இனிமேல் வந்தால் என்ன ஆகும் என்பதை யாரும் கூறத் தேவையில்லை. தீவிரவாதிகள் என கதி ஏற்படும் இந்தியா மட்டுமல்ல, உலகிற்கே தெரியும்

யோகா இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலை. சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, இதற்கு காரணமானவர் பிரதமர் மோடிதான். ஐ.நாவில் யோகா குறித்த தீர்மானத்தை அளித்து 177 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளார் மோடி. அனைத்து நாடுகளிலும் குறிப்பிட்ட அளவு மக்கள் யோகா செய்து வருகிறார்கள்
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE